கரோனா பாதிப்பு: 25% சம்பளத்தைக் குறைத்த 'அருவா' இயக்குநர் 

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிசெய்ய, 'அருவா' படத்தின் சம்பளத்தில் 25% குறைத்துள்ளார் இயக்குநர் ஹரி.

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து 'அருவா' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் ஹரி. ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு, கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்யலாம் என்று பலரும் ஆலோசித்து, சம்பளக் குறைப்பு தொடர்பாகப் பேசி வருகிறார்கள். விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண் தாங்களாக முன்வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, 'அருவா' படத்துக்கான தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக இயக்குநர் ஹரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்த கரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்குத் திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் “அருவா” திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளேன்"

இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE