விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து சம்பளம் குறைத்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண்

விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணும் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதனால் தமிழ்த் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தங்களுடைய படத்தின் நிலை குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர்.

தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் தயாரிப்பாளர்கள் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணும் தனது சம்பளத்தைக் குறைத்துள்ளார்.

இது தொடர்பாக ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கோவிட்-19 அனைத்துத் துறைகளுக்கும் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் இருண்ட சூழலுக்குள் கட்டுண்டிருக்கிறோம். முக்கியமாக பொழுதுபோக்குத் துறை பெரிய துறைகளில் ஒன்று. அதில் நிறைய முதலீடுகள் எப்போதும் எதிர்பாராத ஆபத்தில் இருக்கும்.

இந்த நிலையில், நான் அடுத்து வரும் எனது படங்களில், எனது வருமானத்தில் ஒரு பகுதியை விட்டுத் தருகிறேன். இது ஒரு முக்கியமான சூழல். இதில் துறையில் இருக்கும் அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்பட்டு இந்த ஆபத்தான புயல்களுக்கு நடுவில் கப்பலைத் தொடர்ந்து இயக்க வேண்டும்.

எதிர்பார்ப்பதை விட இந்த சூழல் விரைவில் சகஜமாகும் என்றும், எப்போதும்போல துறையும் இயங்கும் என்றும் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்".

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE