தமிழ் சினிமாவில் இடதுசாரிப் பின்புலம் கொண்ட படைப்பாளிகள், கலைஞர்களுக்குப் பெரும் பார்வை உண்டு, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தொடங்கி பலரும் இடதுசாரி அரசியல் பார்வை கொண்டவர்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர்கள். இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குநர் எஸ்.பி,ஜனநாதன் இந்த வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். தன் திரைப்படங்கள் மூலமாக பாட்டாளி, அடித்தட்டு வர்க்கத்து மக்களின் கதைகளை அவர்தம் வாழ்க்கைப்பாடுகளைப் பேசியும் அவர்களுக்கு எதிரான பெரும் பணக்கார, பெரு நிறுவன சதிகளை அம்பலப்படுத்தியும் திரைவானில் செங்கொடியைப் பறக்கவிட்டவர் ஜனநாதன்.
தேசிய விருது பெற்ற முதல் படம்
பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா, கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள எஸ்.பி,ஜனநாதன் 2003-ல் வெளியான ’இயற்கை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழகத்தின் கடலோரப் பகுதியை வந்தடையும் கப்பல் மாலுமி ஒருவன் அங்கு வசிக்கும் பெண்ணுடன் காதல் வயப்படுவதும் அவள் வேறொருவரைக் காதலிப்பது தெரிந்ததும் அவளுடைய காதல் வெற்றி பெற உதவுவதும்தான் படத்தின் கதை.
» பிரபு சாலமன் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களின் மதிப்பைப் பெற்ற படைப்பாளி
» 'சிப்பியிருக்குது முத்துமிருக்குது' பாடல் உருவான விதம்: கமல் வெளிப்படை
இது கடற்புறங்களில் முகத்தை வருடிச் செல்லும் காற்றைப் போன்ற காதலைப் பேசிய படமாக இருந்தது. அதோடு ஆழ்ந்த அமைதியினூடாக அவ்வப்போது கொந்தளிப்புகளை எதிர்கொள்ளும் கடலைப் போல் ஏற்ற இறக்கங்களும் இன்ப துன்பங்களும் நிறைந்த கடற்கரைப் பகுதி வாழ் மக்களின் வாழ்வியல் பதிவாகவும் அமைந்திருந்தது. அவ்வாறு அமைந்ததானாலேயே பிராந்திய மொழிப் பிரிவில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
முதல் படத்திலேயே தேசிய விருதுடன் களமிறங்கிய ஜனநாதன் அடுத்ததாக இயக்கிய ‘ஈ’ படம் ஏழை எளிய மக்களை மிருகங்களைப் போல் புதிய மருந்துகளைச் சோதித்துப் பார்க்கப் பயன்படுத்தும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் சதியைப் பேசியது. இந்தப் படமும் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதில் நாயகனாக நடித்த ஜீவாவுக்கு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.
உயர்ந்து நிற்கும் பழங்குடி நாயகன்
அடுத்ததாக ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' இந்தப் படத்தில் பழங்குடி மக்களின் வாழ்வும், சர்வதேசக் கொள்ளையர்களுக்கு இலக்காகும் காடுகளும் அவற்றின் வளங்களும் கதைக்களமாகின. இந்தப் படத்தில் வனப் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் பழங்குடி நாயகன் கதாபாத்திரம் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து கடின உழைப்பால் முன்னேறி வருபவர்கள் மேலதிகாரிகளால் மட்டுமல்லாமல் தன்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவர்களாலும் சாதிய ரீதியாக அவமானப்படுத்தப்படும் அவல நிலையைப் படம் பிடித்திருந்தார்.
உற்பத்தியில் தொழிலாளிகளின் பங்கு, முதலாளித்துவத்தின் சுரண்டல், உபரி மதிப்பு, என மார்க்சியக் கோட்பாடுகளை நேரடியாக இந்தப் படத்தில் பேசியிருந்தார் ஜனநாதன். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தப் படம் இதில் நாயகனாக நடித்த ஜெயம் ரவியின் திரை வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது. ஒரு பழங்குடி இனத்தவர் மாபெரும் நாயகனாக்கப்பட்ட அரிதான நிகழ்வும் இந்தப் படத்தின் மூலம் நிகழ்ந்தது. அந்த வகையிலும் ‘பேராண்மை’ முக்கியமான படம்.
ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதியை வைத்து ஜனநாதன் இயக்கிய ‘பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படத்தில் அரசு என்கிற அமைப்பின் அறியப்படாத இருண்ட முகத்தைப் பதிவு செய்திருப்பார். மரண தண்டனையின் கொடும் விளைவுகளையும் பேசியிருப்பார்.
தற்போது ’லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார் ஜனநாதன். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன்,கலையரசன் ஆகியோர் இதில் நடிக்கிறார்கள். மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் ஏதேனும் ஒரு வகையில் மக்கள் சார்பில் நின்று மக்களுக்கான அரசியலைப் பேசியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஜனநாதனின் வருங்காலத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற அவரை இந்தப் பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago