ஊரடங்கு காலத்திலும் படப்பிடிப்பை நடத்தி முடித்த கன்னட இயக்குநர்

By செய்திப்பிரிவு

கன்னட இயக்குநரான வெங்கட் பரத்வாஜ் ஊரடங்கு காலத்திலும் ஒரு முழுப் படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தும்கூர், பெங்களூரு, கங்காபுரா, ஹெப்பல் உள்ளிட்ட நகரங்களில் 10 நாட்கள் நடைபெற்றது. உள்ளரங்கு படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது எடிட்டிங் செய்யத் தயாராகியுள்ளது. இப்படத்துக்கு ‘தி பெயிண்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:

''தற்போது அமலில் உள்ள ஊரடங்கைச் சுற்றி நடக்கும் கதை. சுயநலம், பணத்தாசை, சுரண்டல் உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேசுகிறது. இந்தக் கடினமான சூழலில் ஒட்டுமொத்தப் படத்தையும் எடுத்து முடிப்பது சுலபமானதாக இருக்கவில்லை. ஏறக்குறைய 70 ஜிபி டேட்டாக்களை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. மேக்கப் மேன், லைட் பாய், ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர், நடிகர்கள் என மொத்தம் 17 பேர் இதற்காக உழைக்க வேண்டியிருந்தது''.

இவ்வாறு வெங்கட் பரத்வாஜ் கூறியுள்ளார்.

1 மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் இம்மாத இறுதியில் ஆன்லைனில் வெளியாகவுள்ளது.

வெங்கட் பரத்வாஜ் இயக்கிய ‘கெம்பிர்வே’ என்ற படம் 2017 ஆம் ஆண்டு கர்நாடகா அரசின் சிறந்த திரைக்கதை விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE