சப்பாணி கதாபாத்திரம் உருவான விதம்: சுவாரசியப் பின்னணி பகிர்ந்த கமல்

By செய்திப்பிரிவு

'16 வயதினிலே' படத்தின் சப்பாணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்த சுவாரசியப் பின்னணி பகிர்ந்துள்ளார் கமல்

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் '16 வயதினிலே' படத்தின் சப்பாணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்துப் பேசியுள்ளார் கமல்.

அந்தப் பகுதி:

விஜய் சேதுபதி: சப்பாணி கதாபாத்திரம் எப்படி உருவானது?

கமல்: பாரதிராஜா சப்பாணி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார். நொண்ட வேண்டும் என்பது அவர் முதலில் வைக்கவில்லை. காலை அப்படி வெட்டிக் கொண்டு நடக்க வேண்டும் என்பதை நான் தான் ஆரம்பித்தேன். என்ன இருந்தாலும் நீ ஒரு ஹீரோ, எனவே அதை அதிகப்படியாகச் செய்ய வேண்டாம் என்று பாரதிராஜா சொன்னார். இல்லையென்றால் இன்னமும் கூட செய்திருப்பேன். அந்த மனக்குறையைத்தான் அன்பே சிவம் படத்தில் தீர்த்துக் கொண்டேன்.

விஜய் சேதுபதி: அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ரசிகர்கள் உங்கள் தோற்றத்தை வெறுத்துவிடுவார்கள், கிண்டல் செய்வார்களோ என்ற பயம் வரவில்லையா?

கமல்: நான் வேறு, ரசிகர்கள் வேறு என்று நான் நினைக்கவே இல்லை. நான் தான் ரசிகன். அப்படி ஒரு நடிப்பைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். 'Ryan's Daughter' என்ற ஒரு படம் வந்திருந்தது. அதில் ஜான் மில்ஸ் என்று ஒருவர் நடித்திருந்தார். அவர் கோரமானவர் கிடையாது. ஆனால் அதில் சப்பாணி மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் எனக்கு வியப்பாக இருந்தது. நாயகனை விட அந்த நடிகர் அதிகம் நினைவிலிருந்தார். அந்த நம்பிக்கையில் தான் நானும் நடித்தேன். முக்கியமான காரணம் பாரதிராஜாதான்.

அவர் தான் என்ன செய்தாலும் ரசிப்பார். 'பரமக்குடி, பிச்சிபுட்ட போ' என்பார். நாயகியிடம் முத்தக்காட்சியைப் பற்றி விளக்குவதைப் போல கோவணம் கட்டும் காட்சியை என்னிடம் பயந்து பயந்து சொன்னார். அவர் சொன்னதும் நான் சரி என்று உடனே வந்து நின்றேன். 'என்னய்யா இவன், வெக்கங்கெட்ட நடிகன்யா, வாய்யா வாய்யா' என்று சந்தோஷமாகக் கொண்டாடினார்.

மேலும் சப்பாணி கேரக்டரை கேலி செய்ய செய்ய அவன் இறுதிக் காட்சியில் ஜெயித்து விடுவான். அதுதான் கதை. அதனால் அது பற்றிய பயம் எனக்கு இருக்கவில்லை.

(சப்புனு அறைஞ்சிட்டேன்னு சொல்லும்போதே சப்பாணி கேரக்டர் பெரிய ஹீரோவாகி விடுகிறான் இல்லையா சார் என்று விஜய் சேதுபதி நடுவில் சொல்கிறார்)

அதற்கு கலைமணி தான் காரணம். அவருக்கு பாரதிராஜா எவ்வளவு நட்போ அந்த அளவுக்கு எனக்கும் நட்பு. நான் நடித்த 'பட்டாம்பூச்சி (1975)' படத்திலிருந்தே எனக்கு அவர் பரிச்சயம். '16 வயதினிலே' படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. மைசூரிலிருந்து பெங்களூரு வரவேண்டுமென்றால் காரில் தனியாக வர மாட்டேன். கலைமணி கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லி அவரையும் அழைத்துச் செல்வேன். நாளைக்கு சீன் இருக்குய்யா என்பார். அதெல்லாம் நைட்டு போய் தூங்காம எழுதுங்க என்று சொல்லி உடன் அழைத்துச் செல்வேன். வழியில் நிறையக் கதை சொல்லிக்கொண்டே வருவார். அற்புதமாக இருக்கும். அதெல்லாம் மறக்க முடியாத நாட்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE