'புட்ட பொம்மா' பாடல் முதலில் படத்தில் இல்லை: இசையமைப்பாளர் தமன்

By செய்திப்பிரிவு

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரபலமான 'புட்ட பொம்மா' பாடல், முதலில் திட்டமிடப்படவில்லை என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன்.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ரூ.200 கோடியைத் தாண்டி இந்தப் படம் வசூல் செய்ததாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தமனின் இசை.

படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றன. படம் வெளியானதும் இன்னும் கூடுதல் ரசிகர்களைப் பாடல்கள் பெற்றன. இதுவரை 'அலா வைகுந்தபுரம்லோ' பாடல்கள் 100 கோடி முறைக்கும் அதிகமாக யூடியூபில் பார்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தப் படத்தின் 'புட்ட பொம்மா' பாடலும், அதில் அல்லு அர்ஜூனின் நடனமும் ரசிகர்களிடையே ஹிட்டடித்தன. சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தப் பாடலுக்கு ஆடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த அளவுக்கு இந்தப் பாடல் பலதரப்பட்ட மக்களைச் சென்று சேர்ந்துள்ளது.

ஆனால் ஆரம்பத்தில் இந்தப் பாடல் திட்டமிடப்படவே இல்லை என்று கூறியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் தமன்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "படத்தின் பின்னணி இசையைச் செய்து கொண்டிருந்தபோது எனக்கு யோசனை வந்தது. அல்லு அர்ஜுனிடம் பேசி ஏற்கனவே அந்தச் சூழலுக்கு இருந்த பாடலுக்குப் பதிலாக 'புட்ட பொம்மா' பாடலை வைத்தோம். மூன்றே நாட்களில் அந்தப் பாடலை முடிப்பது பெரிய சவாலாக இருந்தது. ஆனால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. அந்தப் பாடலின் வெற்றிக்கு எனக்கு 50 சதவீத பாராட்டு சேருமென்றால் அல்லு அர்ஜுனுக்கு மீதி 50 சதவீத பாராட்டு சென்று சேர வேண்டும். அவரது அற்புதமான நடனத்தால் அந்தப் பாடலை வேறொரு தளத்துக்கு உயர்த்திவிட்டார்" என்று பேசியுள்ளார் தமன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE