பல முறை உடைந்த மூக்கு, மீசையில் மண்: கமல்ஹாசன் சுவாரசியம்

By செய்திப்பிரிவு

தான் உடலைப் பேணும் விதம் குறித்து கமல் நேரலையில் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் தனது உடலைப் பேணும் விதம் குறித்தும், எலும்பு முறிவுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் கமல்.

அந்தப் பகுதி:

அபிஷேக்: உங்கள் உடலை எப்படி இவ்வளவு வருட காலமாக அந்தந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்?

கமல்: என் உடம்பில் இதுவரை 36 முறை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. என் தலையில் (skull) கூட ஒரு எலும்பு முறிவு உள்ளது. அதுவே ஒரு வகையில் என் உடலை செதுக்கி விட்டது என்று சொல்லலாம். அதற்கேற்றவாறு நான் என் காட்சிகளையே கூட சில சமயங்களில் மாற்றியிருக்கிறேன். பல முறை மூக்குடைந்திருக்கிறது. அதனால் தான் இனிமேல் யாரும் நம் மூக்கை உடைக்க முடியாது என்ற தன்னம்பிக்கை வந்துவிட்டதோ என்னவோ. மீசையில் பல முறை மண் ஒட்டியிருக்கிறது. அதனால் எனக்கு மண்ணைப் பார்த்து பயமே கிடையாது. அது நான் நடக்கும் இடம், கொஞ்சம் முகத்தையும் வைத்துப் பார்ப்போமே என்பது போலத்தான்.

'சகலகலா வல்லவன்' படத்துக்குக் கொஞ்சம் முன்னால் வரை, பத்து வருடங்கள் நான் தினமும் 14 கி.மீ ஓடுவேன். என் உணவைக் கட்டுப்படுத்தவே முடியாது. சிவாஜி அவர்களுடன் சாப்பிடும்போது என்னைப் பார்த்து, 'பரவால்லடா, நம்ம வீட்டுப் பிள்ளைங்க மாதிரி சாப்பிடறான்' என்பார். நான், பிரபு, ராம்குமார் சேர்ந்து உட்கார்ந்தால் ஒரு அண்டா பிரியாணி காணாமல் போகும். சாப்பாடு அளவைக் குறைக்காததால் 'நாயகன்' படத்துக்காக எடை போடுவது சுலபமாக இருந்தது. நடுவில் அடிபட்டு உடல் எடை கூடியது. அதைக் குறைக்கக் கஷ்டப்பட்டேன்.

முதலில் 'ஆளவந்தான்' படத்தின் நந்து கதாபாத்திரம் ரெஸ்ட்லிங் வீரரைப் போல திட்டமிடப்படவில்லை. மிக மிக ஒல்லியான ஒரு ஆளாக, முகம் ஒட்டிப்போனது போலத்தான் நினைத்திருந்தேன். ஆனால் யாருமே அதை விரும்பவில்லை. அதற்கு நேர்மாறாக உடல் எடை போடுவது கடினமாக இருந்தது.

அப்போது ஒரு நாளுக்கு முப்பது (முட்டை) வெள்ளைக் கருவை சாப்பிடுவேன். அது மட்டும் தான், பிறகு சிக்கன் தருவார்கள். சாதம் கிடையாது. ஐயோ அதன் பிறகு முட்டை என்றாலே வேண்டாம் என்று ஆகிவிட்டது. மீண்டும் முட்டை சாப்பிட பத்து வருடங்கள் ஆனது. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அது முடிந்த பிறகு 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் பழைய சண்டைப் பயிற்சி கலைஞரைப் போல ஆகிவிட்டேன்.

இதைச் சொன்னபோது விஜய் சேதுபதி உடனே அந்தப் படத்தின் அந்த சிவன் வேஷம் வசனத்தை ஞாபகப்படுத்தினார். அதைக் கேட்டதும் கமலும் சிரித்துவிட்டு அதைப் பற்றி நினைவுகூர ஆரம்பித்துவிட்டார்

அப்படி நிஜமாகவே சண்டைக் கலைஞர்கள் பேசுவார்கள். 'அப்டியே கத்தி எத்துனு வாடா, வந்து அப்டியே சம்மர்சால்ட் போட்டு எடுதுக்க' என்பார்கள். அதற்கு 'என்ன சார் இது. சம்மர்சால்டும் அடிக்க சொல்றீங்கோ, கத்தி எத்துக்க சொல்றீங்கோ, நான் ஸ்டண்ட் ஆள் சார்' என்று பதில் சொல்வார்கள். அதிலிருந்து எடுத்ததுதான் 'பம்ப்பையும் புச்சிகனும், கங்கையும் அடிக்கணும், கழுத்ல பாம்பு வேற இருக்குது, கீழ காள மாடு இருக்குது, இதுல எப்டி சார் டயலாக் சொல்றது' என்ற வசனம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE