சிவாஜி போன்ற ஒரு ஒழுக்கமான நடிகரைப் பார்க்கவே முடியாது: கமல்

By செய்திப்பிரிவு

சிவாஜி போன்ற ஒரு ஒழுக்கமான நடிகரைப் பார்க்கவே முடியாது என்று கமல் நேரலையில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் சிவாஜி போன்ற ஒரு ஒழுக்கமான நடிகரை பார்க்கவே முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார் கமல்.

அந்தப் பகுதி:

விஜய் சேதுபதி: சமீபத்தில் ஒத்திகை பற்றி உங்கள் கருத்தைப் பார்த்தேன். நாடகங்களுக்கே அவ்வளவு ஒத்திகை பார்க்கும்போது, இவ்வளவு பண முதலீடு செய்யும் சினிமாவுக்கு கண்டிப்பாக ஒத்திகை பார்க்க வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். ஆனால் பலமுறை ஒத்திகை செய்துபார்க்கும்போது அந்தக் காட்சியின் தன்மை சற்று பலவீனமானதைப் போல, பழையதாக ஆகிவிட்டதைப் போல இருக்காதா? இயல்பு வாழ்க்கையில் அடுத்து பேசப்போகும் வசனம் தெரியாது. பல முறை ஒத்திகை பார்க்கும்போது அதன் ஆன்மா கெட்டுவிடுமோ என்ற பயம் வருகிறது.

கமல்: அப்படி பயப்படாதீர்கள். ஏனென்றால் இது தானாக வரும் நாட்டுப் பாடலைப் போல அல்ல. நிறைய பேர் சம்ந்தப்பட்ட நுணுக்கமான வேலை. பல்வேறு காரணங்களால் ஒரு முறை சரியாக வராமல் இன்னொரு முறை நடிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒத்திகையின் போது அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கிவிட்டீர்கள் என்றால் அதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்களை மெருகேற்றலாம்.

எல்லா கலைகளும் அப்படித் தான். பாலமுரளிகிருஷ்ணா பாடுகிறார் என்றால் அது எவ்வளவு வருடத்து பயிற்சி, ஒத்திகை? அப்படி இருப்பதால் தான், இது இந்த ராகம், இதற்குப் பின் இந்த ஸ்வரம் என்றெல்லாம் யோசனையே இல்லாமல், அவரது இசை சந்தோஷமாக, தானாக வந்துகொண்டே இருக்கும்.

அப்படி, வசனம் முழுவதும் உள்ளே இறங்கிவிட்டால், அதில் பல வகைகளை நீங்கள் காட்டலாம். பாலச்சந்தர் என்னை திட்டுவார். நிறைய ஒத்திகைக்குப் பிறகு, நடிக்கும்போது வேறொன்று நடிப்பேன். அதை திட்டிவிட்டு, எனக்குப் பிடித்தது வரவில்லையே, சரி இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது, வைத்துக் கொள்வோம் என்று விட்டுவிடுவார்.

நடிகர் திலகத்தைப் பற்றிச் சொல்லும்போது ஒரே டேக்கில் முடித்துவிட்டார் என்றெல்லாம் சொல்லுவார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. முக்கியமானதாகத் தோன்றவில்லை. தேவையில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிஞ்ச நடிகர் திலகத்தைப் பற்றி நான் சொல்கிறேன் கேளுங்கள்.

படப்பிடிப்பில் இடைவேளையில் நாம் எல்லோருடனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவர் தனியாக உட்கார்ந்திருப்பார். அவருக்குக் கர்வம், யாருடனும் கலக்கமாட்டார் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் கிட்டே சென்று கவனித்தால் தெரியும், கந்த சஷ்டி கவசம் போல அவருக்குள் வசனம் மனப்பாடமாய் ஓடிக்கொண்டே இருக்கும். வெவ்வேறு விதமாக அதைச் செய்து பார்த்துக் கொண்டே இருப்பார். வெளியே காட்ட மாட்டார். அப்படி ஒரு ஒழுக்கமான நடிகரை நீங்கள் பார்க்கவே முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE