‘க்ளாடியேட்டர்’ வெளியாகி 20 ஆண்டுகள் - ரஸ்ஸல் க்ரோவ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

இன்றோடு ‘க்ளாடியேட்டர்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது ‘க்ளாடியேட்டர்’. கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடங்கி பாகுபலி வரையிலும் ‘க்ளாடியேட்டர்’ திரைப்படத்தின் பாதிப்பை ஓரிரு காட்சியிலாவது நாம் உணரமுடியும்.

2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்த ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது.

இந்த ஆண்டு ‘ஜோக்கர்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஹாக்கின் ஃபீனிக்ஸ்தான் இப்படத்தின் வில்லன்.

இன்றோடு இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமூகவலைதளங்களில் ‘க்ளாடியேட்டர்’ குறித்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இப்படம் குறித்து நடிகர் ரஸ்ஸல் க்ரோவ், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘க்ளாடியேட்டர்’ படம் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிருந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இப்படம் குறித்த தனித்துவமான விசயம் என்று நான் கருதுவது, 20 ஆண்டுகளுக்கு பிறகும் இப்படம் எங்கோ ஒரு மூலையில் ஒளிபரப்பு செய்யப்படும். அதை நான் நம்பிக்கையுடன் கூறுவேன். இப்படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லா படங்களுக்கு இது போன்ற அங்கீகாரம் கிடைக்குமா என்று தெரியாது.

வில்லனாக நடித்த ஃபீனிக்ஸ்க்கு இது முக்கியமான படம். அவரது அண்ணன் இறந்தபிறகு ஃபீனிக்ஸ் நடித்த முதல்படமும் இதுவே. அப்போது சில பத்திரிகையாளர்கள் வேண்டுமென்ற அவரிடம் அவரது அண்ணனை பற்றி கேள்வியெழுப்பி அவரது கோபத்தை தூண்டுவார்கள். ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி மீண்டும் கேட்கப்பட்ட போது ஃபீனிக்ஸ் ‘பாருங்கள், ரஸ்ஸல் என்னை சகோதரனைப் போல நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று கூறினார். அந்த பதில் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

இவ்வாறு ரஸ்ஸல் க்ரோவ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE