லிடியனைப் பாராட்டிய இளையராஜா

லிடியனின் இசைப் பணியை இளையராஜா பாராட்டியுள்ளார்.

’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலகம் முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பியவர் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். இதன் காரணமாக பிரபல ஹாலிவுட் டிவி நிகழ்ச்சிகளான எலன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் லிடியன் கலந்து கொண்டார். ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பலரும் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் வீட்டில் இருந்து கொண்டே இளையராஜா இசையமைத்த பாடல்கள், திருவாசகம் உள்ளிட்டவற்றைத் தனது குடும்பத்தினருடன் மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றினார் லிடியன்.

இதைப் பார்த்துவிட்டு லிடியனைப் பாராட்டியுள்ளார் இளையராஜா. இது தொடர்பாக லிடியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவுக்காக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா வீடியோ கால் செய்து பாராட்டினார். இது உண்மையிலேயே எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆசீர்வாதம்" என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் வீடியோ கால் தொடர்பாக லிடியனின் அப்பா வர்ஷன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"கடந்த 25 ஆண்டுகளாக என் வாழ்க்கையை இசைஞானி இளையராஜாவின் இசைக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒவ்வொரு பொழுதும் அவருடைய இசையைப் பழகியும், பாடல்களைப் பாடியும் இன்பத்தில் திளைத்தேன்.

இன்று 25 ஆண்டுகளின் தவத்தின் பயனை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அடைந்தேன் . ஆம், அந்த இசைஞானியிடம் இருந்து வந்த அழைப்பு என்னை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது. நான் திகைத்துப்போனேன்!

அவர் என் குழந்தைகளின் இசைப் பயணத்தைப் பாராட்டவே அழைத்தார். அவர் எங்களை நேராகத் தொடர்புகொள்ளத் தேவையே இல்லை. ஆனாலும் அதைச் செய்தாரே! அந்த அழைப்பில் தாய் போன்ற அவர் பாசத்தையும் குழந்தை போன்ற அவரது சிரிப்பையும் கண்டேன்!

இசையால் மட்டுமா இவர் ஞானி? அல்ல! அதையும் தாண்டி பாசத்தைக் காட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரே என்பதை உளமார உணர்ந்தேன். எனது உள்ளச்சிறகை விரிக்கவும் பறக்கவும் செய்துவிட்டார் இசைஞானி. தரிசனம் கிடைத்தது, பயனும் அடைந்தது".

இவ்வாறு லிடியனின் அப்பா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE