நீண்ட நாள் என் தமிழ் பலவீனமாக இருந்தது: கமல்

By செய்திப்பிரிவு

நீண்ட நாள் என் தமிழ் பலவீனமாக இருந்தது என்று கமல் நேரலையில் பேசும் போது குறிப்பிட்டார்

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் நடிக்கத் தொடங்கி தான் கமல்ஹாசனாக உருவானதன் பின்னணி, அதற்கு உதவியவர்கள் குறித்து நினைவுகூர்ந்தார் கமல்.

அந்தப் பகுதி:

அபிஷேக்: நீங்கள் கமல்ஹாசனாக உருவானது எப்படி?

கமல்: நான் கமல்ஹாசனாக உருவானது எப்படி என்று சொல்ல ஆரம்பித்தால் எத்தனை குருக்களின் பெயர்களை இங்கு பட்டியல் போட வேண்டும் தெரியுமா? என் அம்மா, என்னைப் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்ற அண்ணன் சந்திரஹாசன், என் வசனங்களைச் சரிபார்த்த சகோதரி என குடும்பமே உட்கார்ந்து எனக்காக உதவுவார்கள்.

நடித்து முடித்துவிட்டோமே என்று நிம்மதியாகத் தூங்க முடியாது. அப்படிப் பேசி நடித்திருக்கலாமே என்று அதுபற்றி விவாதம் நடக்கும். (என் சிறுவயதில்) எல்லாப் படங்களின் வெற்றி விழாக்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார் அப்பா. நிறைய ஊர்களில் விழாக்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஒவ்வொரு மேடைக்கும் ஒவ்வொரு உரை பேச வேண்டும் என்று எனக்காக அவர்தான் என் உரையை எழுதித் தருவார். அன்று வழக்கமான இந்த உரை இன்றும் கை கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

மேலும் என்.எஸ். நடராஜன் என்ற நடன ஆசிரியர், நாடகக் கலைஞர் சண்முகம் அண்ணாச்சி, குல்கர்னி என்ற கதக் ஆசிரியர், தங்கப்பன் மாஸ்டர், ஆர்.சி.சக்தி, பள்ளியில் சண்முகம் பிள்ளை என்று இன்னொருவர் இருக்கிறார். கேடி கோவிந்தராஜன் என்கிற வரலாற்று ஆசிரியர், என எல்லோருமே எனக்கு அன்புடன் பயிற்சி தந்தனர். ஆர்.சி.சக்திக்குப் பிறகுதான் அனந்து சாரும், பாலசந்தர் சாரும் என் வாழ்க்கையில் வந்தனர். இதற்கு நடுவில் நிறைய திறமையான நண்பர்கள். அவர்களில் சிலர் இன்று உயிரோடு கூட இல்லை.

அன்று அவர்களையெல்லாம் பார்த்தால் பொறாமையாக இருக்கும். கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர். என்னால் செல்ல முடியவில்லை என்பதால் கல்லூரி அனுபவங்களை அவர்களிடம் செவி வழிச் செய்தியாக கேட்டுப் புரிந்துகொள்வேன்.

தமிழ் ஆர்வம் எனக்கு வளர ஆரம்பித்தது சண்முகம் அண்ணாச்சியால்தான். (படிப்பை விடும் வரை) நான் ஆங்கில வழிக் கல்வி பயின்றவன். ஒரு ஆங்கிலோ இந்தியர் எனக்கு ஆங்கிலம் தனியாகச் சொல்லித் தந்தார். 7-வது, 8-வது படிக்கும் போதுதான் நான் தமிழ் ஒழுங்காகப் பேச ஆரம்பித்தேன். நீண்ட நாள் என் தமிழ் பலவீனமாக இருந்தது. இன்றுகூட எழுத்துப் பிழைகள் வருவதற்குக் காரணம் அதுதான் என நினைக்கிறேன். தமிழ் வகுப்பில் அந்தப் பாடங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொள்வேன். அதெல்லாம் அயோக்கியத்தனம்தான். ஆனால், அதையெல்லாம் செய்துவிட்டுத்தானே நல்லவனாக மாற முடியும்.

எனவே, இவ்வளவு பேர் இருந்ததால்தான் கமல்ஹாசன் என்கிற ஒரு நபரை உருவாக்க முடிந்தது.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்