'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் பாடல்கள் உருவாக்கம் மற்றும் படப்பிடிப்பு பின்னணி சுவாரசியங்கள் குறித்து ராஜீவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. தாணு தயாரித்த இந்தப் படம் 2000-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியானது. வரும் மே 5-ம் தேதியுடன் இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன். அதில் பாடல்கள் உருவான விதம், படப்பிடிப்புகள் நடந்த விதம் குறித்து ராஜீவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
அதில் பாடல்கள் உருவான விதம் குறித்து ராஜீவ் மேனன், "முதலில் 'சந்தனத் தென்றலை' பாடலைத்தான் இறுதி செய்தோம். சங்கர் மஹாதேவன் தான் பாட வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் கோரினேன். அவரைப் பாட வைத்தோம். அவர் இங்கு பாட வந்தபோது, நாட்டக்குறிஞ்சி ராகத்தில் ஒரு பாடலை உருவாக்க நானும் ரஹ்மானும் முயற்சித்துக் கொண்டிருந்தோம். மகாதேவனும் சில யோசனைகள் சொன்னார். ஆனால் எங்களுக்குப் பிடித்த மெட்டு கிடைக்கவில்லை. இன்னும் நிறைய கர்நாடக சங்கீத அடிப்படையில் மெட்டுகளைப் போடும்படி ரஹ்மானை நிர்பந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் யோசனைகள் தீர ஆரம்பித்தன.
» விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 'துப்பாக்கி 2' உருவாகிறதா?
» திருக்குறளை மேற்கோள்காட்டி சர்ச்சைக்கு பதிலடிகொடுத்த 'ஹீரோ' இயக்குநர்
அப்போது சட்டென தியாகராஜ பாகவதரின், ’கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே’ என்ற ஒரு பழைய பாடலை ரஹ்மானுக்கு போட்டுக் காட்டினேன். அவர் அதைக் கேட்டுவிட்டு, ஓ, எனக்கு இப்போது புரிகிறது என்று சொல்லி, ’கண்ணாமூச்சி ஏனடா’ பாடலுக்கான ஆதார மெட்டைப் போட்டார். அந்தப் பாடல் இன்று வரை திரை இசை ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு பாடல். குஷால் தாஸ் கார்டனில், படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களையும் வைத்து அந்தப் பாடலை படம்பிடித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' பாடல் படப்பிடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து ராஜீவ் மேனன் கூறுகையில், " 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' பாடலைப் படம்பிடிக்க ஒரு விசேஷமான இடம் தேவைப்பட்டது. ஏனென்றால் ஐஸ்வர்யா கதாபாத்திரத் தன்மைப்படி கற்பனை உலகிலேயே இருப்பார். நான் ஒரு கோட்டையில் இந்தப் பாடலை, ஒரே ஷாட்டில் எடுக்க முடிகிற மாதிரியான இடத்தில் படம்பிடிக்க விரும்பினேன். ஸ்காட்லாந்தில் இருக்கும் எலியன் டோனன் கோட்டையை இறுதி செய்தோம். அதை ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பார்த்திருந்தோம்.
ஒரு பக்கம் ஐஸ்வர்யாவுக்கு பச்சை, நீலம் போன்ற நிறங்களைக் கொடுத்தோம். அதற்கு நேர்மாறாக தபுவுக்கு சிவப்பு, பிரவுன் போன்ற நிறங்கள் வேண்டுமென்று நினைத்தேன். 'சந்தனத் தென்றலை' பாடலின் முதல் வரியை ஏற்கெனவே காரைக்குடியில், பின்னால் ரயில் ஓடும்போது படம்பிடித்தாகிவிட்டது. எனவே மீதியிருக்கும் பாடலையும் ஒரு ரயில்வே தண்டவாளம் இருக்கும் இடத்தில், சூடான ஒரு பாலைவனத்தில் படம்பிடிக்க நினைத்தேன். அதற்காக எகிப்து சென்று படமாக்கினேன்" என்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடி ஹவுஸில் படமாக்கப்பட்டது குறித்து ராஜீவ் மேனன் கூறுகையில், "காரைக்குடி ஹவுஸ் என்று சொல்லப்படுகிற அரண்மனையின் தமிழ் கட்டிடக்கலையை நான் புகைப்படங்களில் பார்த்து பிரமித்திருக்கிறேன். நான் அதுவரை அப்படி ஒரு விஷயத்தைப் பார்த்ததில்லை. அந்த அரண்மனை இருக்கும் ஊருக்கு படம்பிடிக்க இடங்கள் தேர்வு செய்யச் சென்றோம்.
(காரைக்குடியில் கானாடுகாத்தான்) அங்கிருந்த, இருப்பதிலேயே பார்க்கச் சிறப்பாக இருந்த வீட்டின் உரிமையாளர், பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமி என்பது தெரிந்தது. அதிர்ஷ்டவசமாக, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு, ராமசாமியின் நண்பர் ஒருவரைத் தெரிந்திருந்தது.
ராமசாமியை நான் செட்டிநாடு பேலஸுக்குச் சென்று சந்தித்தேன். 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் கதைச் சுருக்கத்தை ஏற்கெனவே நான் ஒரு பக்கத்தில் எழுதி வைத்திருந்தேன். அதற்கு முன் 'மின்சாரக் கனவு' படத்துக்கான படப்பிடிப்பு இடங்களைத் தேடும்போதிருந்தே அது எனக்குப் பழக்கம். ராமசாமி கதைச் சுருக்கத்தைப் படித்தார். அவருக்குப் பிடித்திருந்தது. படப்பிடிப்புக்கு அனுமதி தந்தார். ஆனால் (நிழல்கள் ரவியின்) மரணம் தொடர்பான காட்சிகளை எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். எனவே அதற்காக இன்னொரு வீட்டைத் தேடி, ராவ் பகதூர் ஹவுஸில் அதைப் படம்பிடித்தோம். படத்தில் நீங்கள் பார்ப்பது இந்த இரண்டு வீடுகளின் கலவையே" என்று தெரிவித்துள்ளார் ராஜீவ் மேனன்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago