முடிந்தவரை அனைவருக்கும் உதவ முயற்சிக்கிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் லாரன்ஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் அவதியுறும் மக்களுக்கும், திரையுலகத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். தான் நிவாரணம் அறிவித்தவுடன் பலரும் தன்னிடம் உதவிகள் கோருவதாக கூறியிருந்தார்.
தற்போது இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
"நான் கரோனா நிவாரணம் வழங்கியதிலிருந்து எனக்கு பாண்டிச்சேரி மற்றும் மற்ற திரைப்பட யூனியன்களிலிருந்து உதவி கேட்டு பல அழைப்புகளும் கடிதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் அனைவரது கடினமான சூழலையும் நான் அறிவேன்.
'சந்திரமுகி 2' படத்துக்காக எனக்கு கிடைத்த அட்வான்ஸ் தொகையிலிருந்து வழங்க யோசித்துக் கொண்டிருந்தேன். படக்குழுவினரும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டனர். ஆனால் இந்த ஊரடங்கின் காரணமாக அவர்களால் சட்டப்படி பத்திர வேலைகளை செய்யமுடியவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல் 'லட்சுமி பாம்' படம், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் சார் கொடுத்த அட்வான்ஸ் ஆகியவற்றிலிருந்து பெரும்பாலான தொகையை யூனியன்களுக்கு கொடுத்து விட்டேன்.
அதையும் தாண்டி என்னை அணுகிய யூனியன்களுக்கு என்னால் முடிந்த வரை வழங்கியிருக்கிறேன். என்னுடைய அட்வான்ஸ் தொகையை நேரடியாக பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பிவிடுமாறு 'லட்சுமி பாம்' படக்குழுவிடம் கேட்டுக் கொண்டேன். அனைவருக்கும் சேவை செய்ய என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
பாண்டிச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு யூனியனின் கடிதமும் என்னிடம் உள்ளன. அவற்றை மனதில் கொண்டு இந்த ஊரடங்கு முடிந்ததும் உறுதியாக உங்களை தொடர்பு கொள்வேன். மிக்க நன்றி"
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்