அஜித்தின் ’முகவரி’!

By வி. ராம்ஜி


ஹீரோன்னா ஜெயிக்கணும். ஜெயிக்கிறவன்தான் ஹீரோ. நினைச்சதை அடையணும்; பெரியாளாகணும். எதிர்க்கிறவனையெல்லாம் அழிக்கணும். அப்படி அழித்தவனை ஊரே கொண்டாடணும். தமிழ் சினிமாவின் ஹீரோ இலக்கணங்கள் இவையெல்லாம்! ஆனால் இவற்றையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, யதார்த்தம் பேசியதன் விலாசம்... முகவரி!

இத்தனைக்கும் அஜித் அப்போது ஆக்‌ஷன் ஹீரோவாகவும் பேரெடுத்திருந்தார். மாஸ் ஹீரோ, இயலாமைகளால் துவண்டு போவதையெல்லாம் ரசிகர்கள் ஏற்பார்களா மாட்டார்களா என்பது குறித்தெல்லாம் கவலையேபடாமல் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதே அப்போது சாதனையாகப் பேசப்பட்டது. இன்றைக்கும் இந்த யதார்த்தம்தான் அஜித் படம் என்பதையெல்லாம் கடந்து, எல்லாதரப்பினரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

2000ம் வருடம், பிப்ரவரி 25ம் தேதி வெளியானது முகவரி. கிட்டத்தட்ட 20 வருடங்களாகி விட்டன. இது அஜித்தின் முகவரி மட்டும் அல்ல. இயக்குநர் வி.இசட்.துரையின் முகவரியும் கூட! அவருக்கான முதல் வரியும் முகவரியும் இந்தப் படம்தான். இதையடுத்து பல படங்கள் பண்ணிவிட்டாலும் இன்றைக்கும் முகவரி துரை என்றே எல்லோரும் சொல்வதுதான், இவரின் முதல் படத்தின் சத்தான முத்திரை!

அழகிய குடும்பம். அப்பா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பால் கட்டமைக்கப்பட்ட குடும்பத்தில் ஸ்ரீதரும் ஒருவன். அப்பா ரிடையர்டு. அண்ணன் வேலைக்குச் செல்கிறார். அண்ணி பொறுப்பாக குடும்பம் பேணுகிறார். இந்த நிலையில், சிறுவயதில் இருந்தே இசை மீது கொண்ட நாட்டத்துடனும் லட்சியத்துடனும் வளர்கிறான் ஸ்ரீதர். சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் அவன் கனவு. ஆசை. விருப்பம். லட்சியம். சுவாசம். வாழ்க்கை எல்லாமே!

இதற்காக, ஒவ்வொருமுறை முயற்சி மேற்கொள்வதும் அது ஏதோவொரு விதத்தில் தட்டிக்கொண்டே செல்வதுமாக இருக்க, கொஞ்சம் துவண்டுபோகிறான். அப்படித் துவள்கிற போதெல்லாம், சுற்றியுள்ள மணிவண்ணனும் விவேக்கும் என்பதான நட்புவட்டம் ஆறுதல் கூறுகிறது. அண்ணனே நண்பனாகி உத்வேகப்படுத்துகிறார்.உற்சாகமூட்டுகிறார். நம்பிக்கை விதைக்கிறார்.

இந்த நிலையில், சினிமாவில் வாய்ப்பு கிடைத்தபாடில்லை. ஆனால் இன்னொரு ஆறுதலுக்கும் தேறுதலுக்கும் ஜோதிகா எனும் தோழி கிடைக்கிறார். ஸ்ரீதர் தெரிகிறார். அவரின் இசை தெரியவில்லை. அவரின் இசை தெரிகிறது. ஆனால் அது ஸ்ரீதருடையது எனத் தெரியவில்லை. ஒருகட்டத்தில் இசையும் அஜித்தும் தெரிகிற வேளையில் பூக்கிறது நட்பு.

இதனிடையே, ஜோதிகாவின் தங்கையை எங்கோ பார்க்க, வெளிநாட்டிலிருந்து வந்து இறங்குகிற அந்தப் பையனுக்குப் பிடித்துவிடுகிறது. பெற்றோருடன் வந்து சம்மதம் கேட்க, அதிர்ந்துதான் போகிறது ஜோதிகா வீடு. மூத்தவள் இருக்க சின்னவளுக்கு மணம் முடிப்பது குறித்து யோசனை வர... அங்கே, ஜோதிகா தன் பெற்றோரிடம் காதலைச் சொல்கிறார். காதலனைச் சொல்கிறார்.

காதலனை வரச் சொல்கிறார். ஸ்ரீதரும் வருகிறார். அங்கே, வேலை குறித்துக் கேட்கிறார். மியூஸிக் டைரக்டராக எப்போது ஆவாய் என உறுதியாகச் சொல்லமுடியுமா என்று கேட்கிறார். கொஞ்சம் பணம் தருகிறேன். அதை வைத்து ஏதேனும் தொழில் செய்துகொள்ளேன் என்கிறார்.

இப்படியான பேச்சின் முடிவாக, காதலைத் துறந்துவிட்டுச் செல்கிறார் ஸ்ரீதர். பார்த்தால் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அண்ணனுக்கும் ஹார்ட் அட்டாக். மருத்துவமனை. சிகிச்சை. குடும்பத்தில் ஆளாளுக்கு வேலைக்குச் செல்ல நினைக்கிறார்கள். அப்போது ஸ்ரீதர் எடுக்கிற முடிவுதான் தொலைந்து போன தேடல் இளைஞனின் தொலையப்படாத முகவரி! அதுதான் அந்த இளைஞனின் அடையாளம்!

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்க, துரை இயக்கத்தில் வெளியானது முகவரி. அஜித், ஜோதிகா, ரகுவரன், சித்தாரா, கே.விஸ்வநாத், மணிவண்ணன், விவேக், ஜெய்கணேஷ், பாத்திமாபாபு, வி.எம்.சி.ஹனீபா என பலரும் நடித்திருப்பார்கள். எல்லோரும் எல்லோருக்கும் கொடுத்த அவரவர்க்கான வேலையை செம்மையாகச் செய்திருப்பார்கள்.

வாய்ப்பு கேட்டு சினிமாக் கம்பெனிக்கு செல்ல, அங்கே சரக்கு வாங்கிவரச் சொல்லி அனுப்ப, அப்படி வாங்கிக்கொண்டு வரும் அஜித்தை ஜோதிகா தவறாக நினைப்பதும் பின்னர் தெரிந்து உணர்ந்து புரிவதும் அழகு. முன்னதாக ரயில்வே ரிசர்வேஷன் கெளண்ட்டரில் சந்திப்பது கவிதை.

‘இன்ஸெண்டீவ் வந்திருக்கு. அப்பா, உங்களுக்கு மூக்குக்கண்ணாடி’ என்பார் ரகுவரன். ‘உனக்கு ஒரு ஷூ வாங்கிக்கோடா’ என்பார் அப்பா. ‘அண்ணிக்கு நல்லிசில்க்ஸ் புடவை’ என்பார் தங்கை. ‘தங்கைக்குத்தான் வாங்கணும்’ என்பார் சித்தாரா. இப்படி ஆளாளுக்கு எல்லோரும் அடுத்தவரின் தேவை பற்றி சொல்ல, ’ஸ்ரீதர் என்ன ஒண்ணுமே சொல்லலியே. என்ன பண்ணலாம்’ என்பார் ரகுவரன்., ‘ஒரு வாக்மேன் வேணும்ணே. அது எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்’ என்று தனக்கானதைக் கேட்பார் அஜித். சீட்டுக் குலுக்கிப் பார்ப்பது என முடிவாகும். எல்லோரும் பெயர் எழுதுவார்கள். மடித்துக் குலுக்கி எடுப்பார்கள். ஸ்ரீதர் என்று பெயர் வரும்.அப்போது ‘ஹை வானவில்’ என்று மாடியில் இருக்கும் அவர்கள் வானவில் பார்க்கப் போவார்கள். அங்கே ஸ்ரீதர் என்கிற அஜித், ஒவ்வொரு பேப்பராகப் பிரித்துப் பார்ப்பார். எல்லாமே ஸ்ரீதர். எல்லாருமே ஸ்ரீதர் என்றே எழுதியிருப்பார்கள். ஒவ்வொரு கலர் பேனாவிலும் எழுதியிருப்பார்கள். ‘என்ன ஸ்ரீதர் வானவில் பாக்கலியா?’ என்று கேட்பார் ரகுவரன். அந்தப் பேப்பரையெல்லாம் காட்டி, ‘வானவில் பாத்துட்டேண்ணே...’ என்று கலங்கியபடி சொல்வார் அஜித். தியேட்டரே நெகிழ்ந்து கைதட்டும்!

’ஒரு ரூபா காயின் கொடுங்களேன்’ என்பார் ஜோதிகா. அஜித் கொடுப்பார். வெயிட்டையும் அதிர்ஷ்டத்தையும் சொல்லும் மிஷினில் ஏறிப்பார்ப்பார். ‘நீங்களும் போட்டுப் பாருங்களேன்’ என்பார். ‘ஏங்க நான் அதிர்ஷ்டசாலியான்னு மிஷின் பாத்துதான் தெரிஞ்சுக்கணுமா. உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலிதாங்க என்பார் அஜித். பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிற அப்பா, உனக்கும் சேத்து சம்பாதிக்கிறேன்னு சொல்ற அண்ணன், எனக்காக விரதம் இருக்கிற அண்ணி, கடவுளே நேர்ல வந்து உனக்கு என்ன வரம் வேணும்னு கேட்டா, எங்க அண்ணன் மியூஸிக் டைரக்டராகணும்னு சொல்ற தங்கச்சி... நான் அதிர்ஷ்டசாலிதானே!’ என்று நெக்குருகிச் சொல்லும் அஜித்தை, எல்லோரும் ரசித்துக் கைதட்டினார்கள்.

இப்படி பல இடங்களில் தன் எழுத்துக்களை வசனங்களாக்கி, கதாபாத்திரங்களுக்கு ஜீவன் கொடுத்து, கதைக்கு பலம் சேர்த்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.

துவண்டு நிற்கும் தம்பிக்கு அண்ணன் டென் ஃபீட் கோல்டு, பத்து அடி ஆழத்தில் தங்கம் கதை. ஜெய்கணேஷிடம்... ‘ஒரு குழந்தைக்கிட்ட அப்பா பிடிக்குமா மாமா பிடிக்குமான்னு கேட்டா, அப்பா பிடிக்கும்னு சொல்லும். அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமான்னு கேட்டா, அம்மாதான் பிடிக்கும்னு சொல்லி அம்மாகிட்ட போய் ஒட்டிக்கும். மியூஸிக்கா லவ்வான்னு கேட்டா, நான் மியூஸிக்னுதான் சொல்லுவேன்’ என்பார் அஜித்.

’சரி... இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ... அப்பவும் மியூஸிக் டைரக்டராகலைன்னு வையுங்க. என்ன செய்வீங்க’ என்று கேட்பார் ஜெய்கணேஷ். ’அப்பவும் மியூஸிக் சான்ஸ் கேட்டு முயற்சி பண்ணிட்டுதான் இருப்பேன்’ என்பார். தியேட்டர் கண்ணைத் துடைத்துக்கொண்டே, கைத்தட்டி ஆர்ப்பரிக்கும். ‘ஜெயிக்கணுமே’ என்று உள்ளே வேண்டிக்கொள்ளும்.

இசையமைப்பாளர் வி.எம்.சி.ஹனிபா கோபப்படும்படி இசை குறித்துச் சொல்கிற விளக்கக் காட்சியும் அப்போது அஜித் பாடுகிற பாடலும் கனமானவை. வாய்ப்பு கிடைத்தும் சென்டிமெண்ட் சினிமா உலகின் காரணம் சொல்லி, ரிக்கார்டிங் கேன்சல் என்றானதும் விரக்தியில் கடற்கரையில் இருக்க, அங்கே எட்டாத உயரத்தில் இருக்கிற மணியை சின்னப்பையன், பொடிப்பையன் முயற்சி செய்து முயற்சி செய்து, மணியடித்துவிட்டு ஸ்டைலாக நடந்து செல்வதில் காட்டுகிற தன்னம்பிக்கை என்று துரையின் இயக்கம் படு ஷார்ப். அவருக்கு பி.சி.ஸ்ரீராமின் கேமிரா மிக நன்றாகவே ஒத்துழைத்து, காட்சிகளையெல்லாம் கவிதையாக்கியிருக்கும்!

ஆண்டே நூற்றாண்டே பாட்டு படமாக்கிய விதம், நவீனமாகவும் பட்டையைக் கிளப்பும் விதமாகவும் அமைந்திருக்கும். கீச்சுக்கிளியே, ஓ நெஞ்சே நெஞ்சே வா, ஏ நிலவே ஏ நிலவே... என்று பாடல்கள் மொத்தமும் பிரமாதம். வைரமுத்துவின் வரிகள் அபாரம். தேவாவின் இசை அற்புதம். மொத்தப் படத்தையும் அஜித் தன் நடிப்பாலும் பாலகுமாரன் தன் வசனத்தாலும் தூக்கிப் பிடித்து, கொடிநாட்டியிருப்பார்கள்.

படத்தின் கிளைமாக்ஸில், ‘என்னப்பா ஸ்ரீதர், லவ்வா, மியூஸிக்கான்னு சொல்லும்போது மியூஸிக்தான்னு சொல்லி காதலையே தூக்கியெறிஞ்சே! இப்ப மியூஸிக்கையே விடுறேன்னு சொல்லி வேலைக்குப் போறியேப்பா’ என்று கலங்கித் தவித்தபடி மணிவண்ணன் கேட்பார்.

’அங்கே வீட்ல அண்ணனுக்கு முடியல. ஆளாளுக்கு வேலைக்குப் போறேன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனா இப்பவும் என்னை வேலைக்குப் போகச் சொல்லி யாரும் சொல்லல. லவ்வா, மியூஸிக்கான்னு வந்தப்ப, மியூஸிக்னு முடிவு எடுத்தேன். மியூஸிக்கா, குடும்பமானு வரும்போது மியூஸிக் வேணாம்னு சொல்லமுடியல. ஆனா குடும்பம் முக்கியம்னு முடிவு எடுத்துட்டேன். அதான் வேலைக்குப் போறேண்ணே...’ என்று சொல்லிவிட்டு அந்த சாலையில் நடந்து செல்வார். அவரின் முதுகுக்குப் பின்னே இருந்தபடி கேமிரா நகரும். கனத்த இதயத்துடனும் நல்ல படம் பார்த்த நிறைவுடனும் வெளியே வந்தார்கள் ரசிகப்பெருமக்கள்.

ஆனால், சினிமாவுக்காக, சினிமாடிக்காக, மீண்டும் முயற்சி செய்ய, அவர் இசையமைப்பாளராகிவிடுகிறார் என்கிற கிளிப்பிங்க்ஸுடன் முடித்திருப்பார் இயக்குநர்.

இன்றைக்கு தேடல், லட்சியம் என்று இருக்கும் இளைஞர்களின் கதை இது. முட்டிமோதி, அவமானப்பட்டு, குடும்பம், சூழல் என பல காரணங்களால், தேடலை நிறுத்திவிட்டு, ஒரு யுடர்ன் அடித்து, குடும்பத்துக்குள் செட்டிலாகிவிடுகிற, தங்களைச் சுருக்கிக் கொள்கிற ஒரு சாமான்ய இளைஞனின் சரித்திரம் இது!

ஆகவே, அந்தத் தேடல் இளைஞர்கள் இருக்கும் வரைக்கும்... நெஞ்சில் தொலைந்து போகாமல், முகவரியும் இருக்கும்!
பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

மேலும்