இர்ஃபான் கான்: சகல தளங்களிலும் முத்திரை பதித்த தன்னம்பிக்கை கலைஞன்!

By செய்திப்பிரிவு

இந்தியத் திரையுலகில் மிகச் சில நடிகர்கள் மட்டுமே, படங்களின் வசூலை வைத்து அல்லாமல் நடிப்பின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர்கள். அந்தப் பட்டியலில் உள்ள நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் கண்டிப்பாக இடம்பெறும் பெயர் இர்ஃபான் கான்.

ஜனவரி 7, 1967-ம் ஆண்டு ராஜஸ்தானின் டோங் மாவட்டத்தில், நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் இர்ஃபான் கான். இர்ஃபானுக்கு 18 வயதானபோது அவரது தந்தை காலமானார். நடிகராக ஆசையிருந்தும் தன்னம்பிக்கை குறைவாக இருந்த இர்ஃபானுக்கு, மிதுன் சக்ரவர்த்தி நடித்த 'ம்ரிகயா' படம் தான் நடிக்க நம்பிக்கை தந்திருக்கிறது. அப்படி ஒரு நிறம் கொண்ட நடிகர் நடிக்க முடியுமென்றால் தானும் முடியும் என்று உணர்ந்திருக்கிறார். இதைப் பற்றி இர்ஃபானே ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலையில் பட்டம் பெற்ற இர்ஃபான் 1984-ம் ஆண்டு டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இர்ஃபானுடன் படித்த சுதாபா சிக்தர்தான் அவரது எதிர்கால மனைவி. 1988-ம் ஆண்டு, மீரா நாயரின் 'சலாம் பாம்பே' திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்ததுதான் இர்ஃபானின் முதல் பாலிவுட் அறிமுகம். பின்னாட்களில் மீரா நாயரின் 'தி நேம்ஸேக்', 'மைக்ரேஷன்', 'நியூயார்க்', 'ஐ லவ் யூ' உள்ளிட்ட படங்களிலும் இர்ஃபான் நடித்தார்.

திரைப்படங்களில் முழு வீச்சில் இறங்குவதற்கு முன்பு 80களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க இர்ஃபானுக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 'பாரதஜ் ஏக் கோஜ்', 'ஜஸீர்', 'பிதா', 'சாணக்யா', 'சந்திரகாந்த்', 'பனேகி அப்னி பாத்' உள்ளிட்ட தொடர்களில் அவர் நடித்தார்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை பாஸு சாட்டர்ஜீயின் 'கம்லா கா மௌத்' (1989), கோவிந்த் நிஹ்லானியின் 'த்ரிஷ்டி' (1990) உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார். 2003-ம் ஆண்டு முதலில் தனது பெயரில் இருந்த கானை நீக்கி, இர்ஃபான் என்ற பெயரில் கூடுதலாக ஒரு 'R' எழுத்தை சேர்த்துக்கொண்டார். இது அதிர்ஷ்டத்துக்காக என்று அப்போது சொல்லப்பட்டது.

2000களில்தான் இர்ஃபானுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தன. 2001-ம் ஆண்டு வெளியான 'தி வாரியர்' திரைப்படம் இர்ஃபானுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இயக்குநர் திக்மான்ஷு தூலியாவுடனான இர்ஃபானின் படங்கள் தனிச்சிறப்பு கொண்டவை. தூலியாவின் முதல் படமான 'ஹாஸில்'-ல் நடித்த இர்ஃபான் கானுக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது. 'ஹாஸில்' படத்தில் இர்ஃபானின் நடிப்புதான் விஷால் பரத்வாஜின் 'மக்பூல்' வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

2007-ல் இர்ஃபானின் முதல் ஹாலிவுட் வாய்ப்பான 'டார்ஜலிங் அன்லிமிடட்' வந்தது. வெஸ் ஆண்டர்சன் இயக்கிய இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இர்ஃபான் நடித்திருந்தார். அதேவருடம் வெளியான ஏஞ்சலினா ஜோலி நடித்த 'மைட்டி ஹார்ட்' படத்தில், இர்ஃபானுக்கு முக்கியக் கதாபத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

2012-ம் ஆண்டு தூலியாவின் இயக்கத்தில் இர்ஃபான் கான் நாயகனாக நடித்த 'பான் சிங் தோமர்' வெளியானது. இந்திய ராணுவ வீரனாக இருந்த ஒரு தடகள வீரர் எப்படி அரசாங்கத்தை எதிர்க்கும் போராளியாக மாறினார் என்கிற உண்மைக் கதை இது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதோடு, சிறந்த நடிகர் என்ற தேசிய விருதையும் இர்ஃபான் கானுக்குப் பெற்றுத் தந்தது.

'மும்பை மேரி ஜான்', 'பில்லு', 'தி லன்ச் பாக்ஸ்', 'தல்வார்', 'ஹைதர்', 'டி டே', 'பிகு', 'மதாரி' என பாலிவுட்டில் ஒரு பக்கம், அதே நேரத்தில் 'ஸ்லம்டாக் மில்லினர்', 'தி அமேசிங் ஸ்பைடர்மேன்', 'லைஃப் ஆஃப் பை', 'ஜுராசிக் வேர்ல்ட்', 'இன்ஃபெர்னோ' என பெரிய பட்ஜெட் ஹாலிவுட் படங்கள் இன்னொரு பக்கம் என இரண்டு இடங்களிலும் புகழ்பெற்றார் இர்ஃபான். 'தி லன்ச்பாக்ஸ்' திரைப்படம் இர்ஃபானுக்கு சிறந்த நடிகர் என பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றுத் தந்தது.

இதோடு 2010-ம் ஆண்டு ஹெச்பிஓ தொலைக்காட்சியின் 'ட்ரீட்மென்ட்' என்ற தொடரிலும் இர்ஃபான் நடித்தார். 2011-ம் ஆண்டு இர்ஃபான் கானுக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது.

"இன்னும் கூடுதலாக ஏதாவது செய்வோமே என்றுதான் இர்ஃபான் என்றும் சொல்வார்" என இர்ஃபானின் வாழ்க்கைக் கதையை எழுதியிருக்கும் ஷைலஜா கேஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், தனக்கு இயக்கம் வராது, ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யும் திறமை இல்லை, நான் நடிகன் மட்டுமே என்று கூறியிருக்கிறார் இர்ஃபான்.

2018-ல் இர்ஃபானுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபோது கூட அதை அவர் பக்குவமாகவே அணுகினார். "இதுபோன்ற திடீர் சூழல் தான், ஊகிக்க முடியாத நீரோட்டங்கள் நிறைந்த மிகப்பெரிய கடலில் மிதக்கும் தக்கை நாம் என்பதை உணரவைத்தது. அதைக் கட்டுப்படுத்த நாம் தீவிரமாக முயல்கிறோம்" என்று அப்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

நாடகங்கள், பாலிவுட், ஹாலிவுட், வெப் சீரிஸ் என அனைத்திலுமே முத்திரை பதித்த இர்ஃபான் கான் காலமானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தாலே எவ்வளவு கஷ்டங்கள், போராட்டங்கள் கடந்து தனக்கான நிலையான இடத்தைப் பிடித்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்