தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர். இந்தப் பெரும் பட்டியலில் இணைவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளவர்தான் இன்று (ஏப்ரல் 26) பிறந்த நாள் கொண்டாடும் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி.
புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களில் இயக்கம், நடிப்பு என இரண்டு குதிரைகளிலும் வெற்றிச் சவாரி செய்துகொண்டிருப்பவர்களில் முக்கியமானவரான சமுத்திரக்கனி ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைக் கலைஞர் என்ற அங்கீகாரத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறார்.
சிகரத்தின் சீடர்
100 திரைப்படங்களுக்கு மேல் இயக்கி தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத சகாப்தமாக விளங்கும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் பாடம் பயின்றவர் சமுத்திரக்கனி. அதற்கு முன்பு இயக்குநர் சுந்தர் கே.விஜயனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ‘பார்த்தாலே பரவசம்’ படத்திலும் ‘அண்ணி’ தொலைக்காட்சி நெடுந்தொடரிலும் பாலசந்தரின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து ‘அரசி’, ‘செல்வி’ போன்ற தொடர்களை இயக்கினார்.
» டிஜிட்டல் வெளியீடு என்பது தயாரிப்பாளரின் 100% உரிமை: டி.சிவா உறுதி
» கடும் ஊரடங்கு: தாயின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்து அழுத இர்ஃபான் கான்
2003இல் வெளியான ‘உன்னைச் சரணடைந்தேன்’ சமுத்திரக்கனி இயக்கிய முதல் திரைப்படம். விமர்சகர்களின் பாராட்டையும் ஓரளவு வணிக வெற்றியையும் இப்படம் பெற்றது. அடுத்ததாக கேப்டன் விஜயகாந்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். 'நெறஞ்ச மனசு' என்ற கிராமிய மண் சார்ந்த அந்தப் படம் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை.
இயக்குநராக முதல் தடம்
2009இல் வெளியான ‘நாடோடிகள்’ அவருக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. விமர்சகர்கள், ரசிகர்களின் வரவேற்பையும் மிகப் பெரிய வெற்றியையும் பெற்ற அந்தப் படம் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது. 'போராளி', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்கள் ஊழல் எதிர்ப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பேசின. 2016இல் வெளியான ‘அப்பா’ சில தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையையும் அவற்றால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் பொட்டில் அறைந்தார் போல் பேசியது. சில திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. இந்த ஆண்டு வெளியான ‘நாடோடிகள் 2’ சாதி ஏற்றத் தாழ்வுகளற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான பயனுள்ள வழிமுறைகளைப் பரிந்துரைத்தது.
புதுப் பரிமாணம் தந்த ‘சுப்பிரமணியபுரம்’
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘சுப்பிரமணியபுரம்’ சசிகுமார் என்ற நடிகர்/ இயக்குநரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. சமுத்திரக்கனிக்குள் இருந்த நடிகரையும் முழுமையாக வெளிக்கொண்டுவந்தது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை ‘விசாரணை’ படத்திற்காக சமுத்திரக்கனி பெற்றதன் தொடக்கப் புள்ளி அதுதான். திரைத் துறையில் தொடக்க ஆண்டுகளில் 'பார்த்தாலே பரவசம்', 'பருத்திவீரன்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நெடுந்தொடர்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். 'சுப்பிரமணியபுரம்' படத்தில் உள்ளூர் அரசியல்வாதியின் வஞ்சகம் நிறைந்த தம்பியாக நடித்து அசத்தினார்.
பன்முக நடிகர்
சசிகுமார் இயக்கிய இரண்டாவது படமான ‘ஈசன்’ படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடித்தார். இன்றுவரை நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். கிராமத்து விவசாயி, சிறுநகரத்து வியாபாரி, பெருநகரங்களின் கார்ப்பரேட் ஊழியர், காவல்துறை அதிகாரி. ரவுடி, தாதா, ஆசிரியர்,மருத்துவர் என எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் மாறி மாறி நடித்து முத்திரை பதித்துவருகிறார். தமிழ் மட்டுமல்லாமல். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.
முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொருவரும் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் திரைத் துறையில் நீடித்து இயக்குநராகவும் நடிகர்களாகவும் பெரும் சாதனைகளைப் புரிந்து லெஜெண்ட் அந்தஸ்தைப் பெற்றிருப்பவர்கள். அவர்களில் சிலர் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள். இப்போது ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் நன்மதிப்பையும் விருதுகள் உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் சமுத்திரக்கனி இரண்டு துறைகளிலும் பெரும் சாதனைகளைப் பல ஆண்டுகள் நிலைத்து லெஜெண்ட் அந்தஸ்தைப் பெற அவருடைய பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago