எல்லாத் திரைப்படங்களுக்கும் அம்மா செல்லமாட்டாள். அழுதுகொண்டே இருக்கும் படங்களையே அவளுக்கு அதிகம் பிடிக்கும். அப்படிப்பட்ட அழுகாச்சிக் கறுப்பு வெள்ளைப் படங்களை எட்டு வயது முதல் நானும் கண்டிருக்கிறேன். பல காட்சிகளில் என்னையும் கட்டிக்கொண்டு திரையரங்கில் அழுதிருக்கிறாள். அம்மா மட்டுமல்ல; அன்று பெரும்பாலான பெண்கள் இப்படி அழுவது எனக்கு விநோதமாக இருக்கும். டிக்கெட் கவுண்ட்டரில் இருக்கும் பொந்துக்குள் காசைக் கொடுத்து சீட்டு வாங்கிக்கொண்டு வந்து அழுகிறார்களே எனத் தோன்றும். அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான படமாக ஒன்று தகுதி பெறுகிறது என்றால், அதில், சற்றும் எதிர்பாராத வாழ்க்கையின் ஆகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் கதாநாயகி இருப்பாள். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ தேவிகாவைப் போல.
‘சொன்னது நீதானா.. சொல்..சொல்.. என்னுயிரே..’ என்று சிதார் இசைக் கருவியை நிமிர்த்தி வைத்து, அதை இசைக்கும் தன் விரல் அசைவுகளில் கூட சோகத்தின் மென் நடனத்தை வெளிப்படுத்தியபடி தேவிகா பாட... அந்தக் காட்சியின் சூழல் புரிந்தும் புரியாத பால்யத்தில் என் மனதையும் அந்தப் பாடல் பிசைந்துகொண்டிருந்தபோது அவள் மடியில் அமர்ந்திருந்த என் தலையில் சொட்டு சொட்டாய் தண்ணீர் தெறிக்கத் தொடங்கியது. நிமிர்ந்து அம்மாவின் முகத்தைப் பார்த்து அவளது கண்களைத் துடைத்துவிட்டேன் நானும் அழுதுகொண்டே... அதுபோல், அவள் அழுவதும் நான் துடைப்பதுமான திரையரங்க தருணங்களில் தன் கன்னத்தோடு என் கன்னத்தை வைத்து பாந்தமாய் அழுத்திக்கொண்டு ஆதரவு தேடும் ஒரு பெண்மையாக மாறிப்போவாள். அன்றும் அப்படித்தான், ‘சொன்னது நீதானா..’ பாடல் முடிகிறவரை அழுவதை மட்டும் அவள் நிறுத்தவேயில்லை. இத்தனைக்கும் அந்தப் படத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்போது மீண்டும் அவள் ஐந்தாவது முறையாக அவள் பார்த்ததாக என் உயர்நிலைப் பள்ளி நாட்களில் கூறியிருக்கிறாள். ஒவ்வொரு முறை பார்ப்பதற்கும் சில ஆண்டுகள் கால இடைவெளி இருக்கிறது என்றாலும் ஏற்கெனவே தெரிந்துவிட்ட ஒரு கதையைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது அழுகை வருமா என இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அக்கால கட்டத்தில் சரோஜாதேவி, சாவித்திரி ஆகிய குண்டு குண்டான நடிகையர் இருந்தபோதும் அம்மாவுக்கு தேவிகா நடிக்கும் படங்களின் மீது மட்டும் தனிப் பித்து இருந்தது. அதை நான் எப்படிக் கண்டுபிடித்தேன் என்றால்... படம் பார்த்து வீடு திரும்பிய மறுநாள் தொடங்கி .. வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே இனிமையான கீச்சுக் குரலில் அவள் முணுமுணுத்துப் பாடும் பாடல்... முதல் நாள் பார்த்த தேவிகா நடித்த படத்தின் பாடலாக இருக்கும்.. அதில் அவள் நீண்ட காலம் பாடிக்கொண்டிருந்த பாடல்.. ‘நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை...’.
உற்சாகம் கரைபுரளும் தருணங்களில் அவள் பாடும் ஒரு காதல் பாடல்.. ‘அழகுக்கு மலருக்கும் ஜாதியில்லை..’. அப்பா மதுரை போயிருந்த நாட்களில் ‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்..’ பாடிக்கொண்டிருப்பாள். அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு பேச்சை நிறுத்திவிடும் ஊடல் நாட்களில் ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ பாடலை கொஞ்சம் சத்தமாகப் பாடிக்கொண்டிருப்பாள். அப்போது அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருக்கும்.
மனைவியைப் போல தன்னால் பதிலுக்குப் பாட முடியவில்லையே என்ற கோபமாகவும் அது இருக்கலாம். தென்னை மரங்களால் அடர்ந்த கொல்லையை அம்மா உற்சாகமாகக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும்போது.. அம்மாவின் மனதறிந்து, பக்கத்து வீட்டு கோவிந்தம்மாள் அக்காள், “மேரி.. ஆயிரம் பெண்மை மலரட்டுமே பாடேன்’ என்று கெஞ்சலாக வேண்டுகோள் வைப்பாள். ஆனால் அம்மா அதற்குப் பதிலாக ‘அமைதியான நதியினிலே ஓடம்..’ என்று மூங்கில் வேலியோரம் நின்று பாட... கொல்லையின் அந்தப் பக்கத்தில் மஞ்சள் பூக்களைக் கொத்துக் கொத்தாய் மலர்த்தித் தள்ளியிருந்த நிலக்கடலைப் பயிருக்குச் சிறிய களைக்கொட்டால் களை பறித்துக்கொண்டிருக்கும் அந்த அக்காளின் முகத்தில் புன்னகை மலர்ந்து சிலுசிலுக்கும். ஏனோ அப்போது வானொலியில் அதிகமாய் ஒலித்துக்கொண்டிருந்த ‘தூக்கணாங் குருவிக்கூடு..’ பாடலை அம்மா பாடி நான் பார்த்ததில்லை.
தேவிகா - சிவாஜி ஜோடியின் படங்களை விட தேவிகா - ஜெமினி இணை சேர்ந்த படங்கள் அம்மாவுக்கு அதிகமாகப் பிடித்திருந்த காரணம் இப்போது பிடிபடுகிறது. நடிகர்கள் - நடிகைகள் மிகையாக நடிப்பது அம்மாவுக்குப் பிடித்திருக்கவில்லை. கல்யாண்குமாரின் நடிப்பை அம்மா சிலாகிப்பாள். கோவிந்தமாள் அக்காளிடம் ‘ஜோடின்னா கல்யாண்குமார் - தேவிகா தானடி’ என்பாள். கோவிந்தமாள் அக்காவுக்கோ சரோஜா தேவியை அதிகமும் பிடித்திருந்தது. ‘சரோஜா தேவிய நடிப்புல அடிச்சுக்க முடியுமா?’ என்பார் அந்த அக்கா. ‘போடி.. போக்கத்தவளே... ‘நெஞ்சில் ஓர் ஆலயம். வாழ்க்கைப் படகு, வெகுளிப்பெண், அன்னை வேளாங்கண்ணி போதும்டி.. நடிப்புன்னா நம்ம வீட்டுப் பெண்ணைப் பார்க்கிற மாதிரி...நம்மகிட்டப் பேசுற மாதிரி இருக்கனும்டி.. எப்பப் பார்த்தாலும் கொஞ்சிக்கிட்டே இருக்கிறதுக்குப் பேரு நடிப்பா?’ என்று சண்டைக்குப் போவாள்.
அம்மாவுக்கு தேவிகாவைப் பிடித்திருக்க, அவர், அம்மாவைப்போல் ஒல்லியாகக் கொஞ்சம் பூசினாற்போல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் அவள் கண்களுக்கு மை தீட்டியோ... நெற்றியில் பொட்டிட்டோ நான் பார்த்ததில்லை. கத்தோலிக்கப் பெண்கள் பலர் பொட்டு வைத்துக் கொள்வார்கள் என்றாலும், வளைகாப்பு, பூப்பெய்தும் சடங்குகளுக்குச் சென்று வரும்போது மட்டும் அந்த வீட்டின் பெண்கள் மனம் நோகக் கூடாது என்று அங்கே அவளுக்கு இடப்பட்ட வட்டக் குங்குமத்தை அந்த நாள் முழுவதும் அப்படியே விட்டிருக்கையில் எனக்கு தேவிகாவின் முகமே நினைவுக்கு வந்துபோகும். தேவிகாவிடமிருந்து அம்மா ‘காப்பி’யடித்த ஒன்று இருந்ததென்றால் அவளது நீண்ட கூந்தலை அவள் கெட்டியான ஒற்றைப் பின்னலாகத் தானே பின்னிக்கொள்ளும் அந்தத் திறமையான அழகுதான்.
பின்னாளில் அப்பா மறைந்து சில மாதங்கள் ஓடியிருந்த அவளின் 60-களின் நாட்களில், அப்போது பிரபலமாக இருந்த வி.எச்.எஸ்.பிளேயரை வாடகைக்கு எடுத்துவந்து ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை பிளே செய்தேன். சில நிமிடங்கள் கூட ஓடியிருக்கவில்லை. ஏனோ ஒரே வார்த்தையில் ‘அதை நிறுத்து’ என்று சொல்லிவிட்டாள். ‘நெஞ்சம் மறப்பதில்லை கேசட்டும் எடுத்துட்டு வந்திருக்கேன்ம்மா’ என்றேன். ஆனால், அவள் ஆர்வம் காட்டவில்லை. அப்பாவின் இழப்பு அவளை முடக்கியிருந்தது முக்கிய காரணம் என்றாலும், ஒரு டிவி பெட்டியில் அதுபோன்ற காவியங்களை, வெளிச்சம் சூழ்ந்த வீட்டின் முற்றத்தில் காண அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரைத் திரையரங்குதான் இன்னொரு தேவாலயம்.
தேவிகா நடித்த படத்தை செண்பகா தியேட்டரில் முதலாட்டம் காண்பது என்று முடிவெடுத்துவிட்டால் பொழுது சாய ..பாமணி ஆற்றின் பாலத்தைக் கடந்து என்னை ஓட்டமும் நடையுமாகக் கூட்டிக்கொண்டு நடப்பாள். மேற்கே சூரியன் வானத்தில் மேகங்களுக்குப் பொன் முலாம் பூசிவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருப்பான். வழியில் சாதி வாரியாக இருக்கும் சுடுகாடுகளைக் கடந்தே மன்னார்குடி சிறு நகருக்குள் அடிவைக்கமுடியும். அவள் நடப்பது எப்போதுமே மெல்லோட்டமாக இருக்கும். வேலியை நெறித்துக்கொண்டு கொல்லைக்குள் புகுந்துவிடும் கிடை மாடுகளைத் துரத்த அவள் மான்போல் துள்ளி ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
திரையரங்கு நோக்கி நடக்கையில் அவளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நான் திணறும்போது பெரிய பிள்ளை என்றும் பாராமல் சடாரென்று தூக்கி என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு அதே வேகம் குறையாமல் நடப்பாள். அன்று பாமணி ஆற்றுக்கரையில் ஒரு சுடுகாட்டில் பிணம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த நான் ‘அம்மா பொணம் எரியுது.. வா.. வீட்டுக்கு ஓடிப் போயிடலாம்’ என்று தீனமாகக் கெஞ்சினேன். ‘அதுக்கெல்லாம் பயப்படாத குட்டிம்மா... அவங்க கடவுள்கிட்ட போய்ச் சேர்ந்துட்டாங்க...’ என்று சொல்லிக்கொண்டே தன் முந்தானையால் என் கண்களை மறைத்துவிட்டு சில நிமிடங்கள் திரையரங்கில் அடி வைத்துவிட்டாள். அன்று நாங்கள் பார்த்த படம் கலைஞரின் ‘மறக்க முடியுமா?’.
உண்மையில் தேவிகாவின் நடிப்பை எனக்கும் மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிவிட்டாள் அம்மா. மறுநாள் வீட்டில் ‘காகித ஓடம் கடல் அலை மீது போவதுபோலே மூவரும் போவோம்’ என்ற பாடலை அவள் பாடிக்கொண்டிருந்தாள். இப்போது அப்பா, அம்மா மட்டுமல்ல; அளவாகவும் சிறப்பாகவும் நவரச நடிப்பைத் தந்து தமிழ் மனங்களில் நிறைந்திருக்கும் தேவிகாவும் உயிருடன் இல்லை. ஆனால்,யூடியூபில் நீந்துகையில் தேவிகாவைப் பார்க்கும்போது அம்மாவை உயிருடன் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago