நானும் என் தந்தையும் வெவ்வேறு சிந்தனையுடையவர்கள்: சித்தார்த் மல்லையா

தனது தந்தை விஜய் மல்லையா பற்றிய எதிர்மறையான செய்திகளை எதிர்கொள்வதும், கையாள்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை என்று நடிகரும், விஜய் மல்லையாவின் மகனுமான சித்தார்த் மல்லையா கூறியுள்ளார்.

கிங்ஃபிஷர் என்ற மிகப்பெரிய மதுபான நிறுவனத்தை நடத்தி வந்த மல்லையா பல்வேறு துறைகளிலும் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் கிட்டத்தட்ட ரூ.9,000 கோடி அளவு பணத்தை வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியதற்காகவும், மோசடி செய்ததற்காகவும் தற்போது இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். தற்போது விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த், தனது தந்தை தப்பியோடிய பிறகு தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசியுள்ளார்.

"எனது தந்தையின் சூழல் சிக்கலாக இருந்தது. யாருக்குமே அவர்களின் நெருங்கிய உறவினரோ, நண்பரோ அப்படி ஒரு மோசமான காலகட்டத்தில் இருப்பதைப் பார்க்கப் பிடிக்காது. இதில் கடினமான விஷயமே அதனால் என்னை நோக்கி வந்த எதிர்மறையான பேச்சுகள்தான்.

ஆனால் இன்னொரு பக்கம், அந்த நிலை எனது சுயத்தை அறிந்துகொள்ள, என் மீது அக்கறை எடுத்துக்கொள்ள, எனது மனநல ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு வர உதவி செய்தது. எனது உண்மையான இயல்பை அறிந்து அதோடு சேர வழி செய்தது.

இந்த அனுபவங்கள் எனது தந்தையுடனான எனது பிணைப்பை மாற்றியதா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இருவருமே வெவ்வேறு நபர்கள். வெவ்வேறு சிந்தனையுடையவர்கள். இந்த அனுபவங்களை அவரவர் வழியில் தான் கையாண்டுள்ளோம்" என்று சித்தார்த் பேசியுள்ளார்.

தனது மன அழுத்தம், அதிலிருந்து மீண்டதைக் குறித்தும், குடிப்பழக்கத்தை விட்டது குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ள சித்தார்த், எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் மனநல ஆரோக்கியம் குறித்துத் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE