நான் டப்பிங் கலைஞர் என்பது பலருக்குத் தெரியாது: நடிகர் ராஜேஷ்

By செய்திப்பிரிவு

நான் டப்பிங் கலைஞர் என்பது பலருக்குத் தெரியாது என்று நடிகர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். தற்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதன் தமிழாக்கம்:

சின்னத்திரையில் நடிப்பது பற்றி?

சின்னத்திரைக்கு வந்த முதல் நடிகர்களில் நானும் ஒருவன். தாகம், தொலைந்து போனவர்கள் போன்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் சின்னத்திரையில் நடிக்க வித்தியாசமான அளவுகோலை வைப்பதில்லை. இயக்குநர் கேட்பதைத் தருகிறேன். நடிப்பில் அனுபவம் இருந்தால், கேமராவைப் பார்த்து பயமில்லை என்றால் நடிப்பு எளிதாக வரும் என்று நினைக்கிறேன்.

ஒரே நேரத்தில் இரண்டு துறைகளில் இயங்குவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது?

எங்கு இருந்தாலும் நான் ஒவ்வொரு நாளையும் ரசிக்கிறேன். எனக்கு 71 வயதாகிறது. ஆங்கிலத்தில் சொல்லும்போது 71 ஓடுகிறது (running) என்பார்கள். தமிழில் 71 நடக்கிறது என்பார்கள். நான் ஆரோக்கியமான வழியில் நடந்து கொண்டிருக்கிறேன். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வருடங்கள் போனஸ் தான். அதை நான் அமைதியில் கழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் டப்பிங் கலைஞர் என்பது பலருக்குத் தெரியாது.

நடிகர் முரளிக்காக 'டும் டும் டும்', 'மஜா', 'உள்ளம் கேட்குமே' உள்ளிட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்தேன். எதைச் செய்தாலும் முழு அர்ப்பணிப்போடு செய்கிறேன். எனவே எனக்கு எல்லாவற்றிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது.

உங்கள் எழுத்துக்களைப் பற்றி?

நான் ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். எல்லாம் தமிழில். முரண் சுவை அதில் ஒன்று. அது முரண்களைப் பற்றியது. ஒரு நாளிதழுக்காக அதைத் தொடராக எழுதினேன். மறைந்த தலைவர் இந்திராகாந்தி விஷயத்தில் மக்களின் பாதுகாவலர்களே கொலைகாரர்களாகவும் மாறிய முரண் பற்றி எப்போதும் யோசிப்பேன். எனவே, ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா பாரதி, ஐன்ஸ்டைன் என 52 வாரங்கள் பல்வேறு ஆளுமைகளைப் பற்றி எழுதினேன். உலக சிறப்பான திரைப்படங்கள், அதே போல சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், நடிகை ஆட்ரே ஹெப்பர்னைப் பற்றிய புத்தகம் ஒன்று, ஜோதிடம் புரியாத புதிர் உள்ளிட்ட வேறு சில புத்தகங்களையும் எழுதினேன்.

நீங்கள் நடித்த 150 படங்களில் உங்களுக்குப் பிடித்த மூன்று படங்கள்?

கடினமான கேள்வி. இருந்தாலும் நீங்கள் மூன்று எனச் சொன்னதால் சொல்கிறேன். எந்த கலைஞருக்குமே முதல் முயற்சி தான் சிறந்த முயற்சி. எனவே நான் நாயகனாக நடித்த 'கன்னிப் பருவத்திலே', பின் 'அந்த ஏழு நாட்கள்'. இன்று வரை அந்தப் படத்தின் இறுதிக் காட்சி பேசப்படுகிறது. இயக்குநர், நடிகர் கே பாக்யராஜ் அற்புதமாக எடுத்திருந்தார். அடுத்தது தேர்ந்த இயக்குநர் கே பாலச்சந்தர், 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் என்னிடமிருந்து சிறந்த நடிப்பைப் எடுத்தார். ஆனால் இப்படி ஒவ்வொரு படத்தைப் பற்றியும் என்னால் ஒரு சிறப்பம்சத்தைச் சொல்ல முடியும்.

உங்கள் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

நான் பாக்கியசாலி என்று நான் நினைக்கிறேன். எப்படி என்று விளக்குகிறேன். இப்போது, கரோனா நெருக்கடியால் உலகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் நிறையப் படிப்பேன் என்பதால் நான் கற்ற விஷயங்களை மக்களுடன் பகிரலாம் என்று எனது குடும்பத்தினர் உத்தேசித்தனர். அப்போது, யூடியூபில் நான் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஏற்கனவே பேசி வருவதால் அது கை கொடுத்தது.

சமீபத்தில் 18 தமிழர்கள் கெய்ரோவில் ஒரு கப்பலில் மாட்டிக்கொண்டனர். ஆனால் இப்போது வீடு திரும்பிவிட்டனர். அதில் ஒருவர் வனிதா ரங்கராஜ். எனக்கு அவரைத் தெரியும். மூத்த குடிமக்களுக்காக இரண்டு ஆதரவு இல்லங்களை நடத்துவதோடு கோவையில் சில சமூக நல அமைப்புகளையும் நடத்தி வருகிறார். எனது யூடியூப் பேச்சுகள் பயனுள்ளதாக இருந்ததாகவும், கப்பலில் அவர்களை நல்ல மனநிலையில் வைத்திருந்ததாகவும் கூறினார். எனக்கு இரண்டு காரணங்களுக்காகச் சந்தோஷமாக இருந்தது. ஒன்று, அவர்கள் பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனர், இரண்டு அவர்களது அழுத்தத்தைக் குறைக்கச் சிறிய அளவு நான் உதவியிருக்கிறேன்.

இன்னொரு பக்கம், நான் 7 வருடம் ஆசிரியராக இருந்தேன். 47 வருடங்கள் நடிகனாக இருக்கிறேன். இப்போது 71 வயதில், நான் மீண்டும் எனது ஆரம்பக் காலத்துக்குச் சென்று விட்டதாகத் தெரிகிறது. நான் மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லித் தருகிறேன் என்று என் நண்பர் ஒரு நாள் எதேச்சையாகச் சொன்னார். அதைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

எஸ்.ஆர்.அசோக் குமார் (தி இந்து, ஆங்கிலம்), தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE