ஒரு தமிழ்ப் பாடல் - மலையாளப் பாடலாகவும் இருக்கும் அதிசயம்!

By ஆர்.சி.ஜெயந்தன்

தமிழகம் - கேரளம் இரண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையில் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான நீர்ச்சுனை பள்ளத்தாக்கு அட்டப்பாடி. இன்று கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பாலக்காடு கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் அட்டப்பாடியும் அதனுடன் நம் கைவிட்டுப் போய்விட்டது.

இங்குள்ள மலைவாழ் மக்கள் தமிழகப் பழங்குடிகள். அவர்களது தாய்மொழி தமிழ். ஆனால் மெல்ல மெல்ல அவர்களது தமிழில் மலையாளம் கலந்துவிட்டது. தலைமுறைகள் மாறி மாறி வந்து பெரும்பாலானவர்கள் மலையாளத்தையே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும், அவர்களது பேச்சு மொழியை உற்றுக் கவனித்தால் அது அப்படியே உருத்திரிந்த தமிழ் மொழியாக இருப்பதைப் பார்க்க முடியும். சேர மண், ஆதித் தமிழ் நிலம்தான் என்றபோதும், 200 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் பேசி வாழ்ந்த அட்டப்பாடி பழங்குடி மக்களில் இன்று தமிழ் பேசும் குடும்பங்கள் அங்கே குறைவாகவே உள்ளன. இருந்தபோதும் அப்பகுதியின் அலுவல் பூர்வ அரசு மொழிகளாக மலையாளத்தைத் தமிழையும் வைத்திருக்கிறது சகோதர கேரளம்.

அட்டப்பாடியின் தமிழ்ப் பேச்சுமொழி அப்படியொன்று பெரிதாக மாறிவிடவில்லை என்பதற்கு அங்கு வாழும் கிராமிய மக்களின் நாட்டார் பாடல்களே சாட்சி. அதை அற்புதமாக எடுத்துக்காட்டியது ‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாளப்படத்தில் இடம்பெற்று தற்போது உலகப் புகழ்பெற்ற “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு..” பாடல்.

பிரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் திரைக்கதாசிரியர் சச்சி எழுத்து, இயக்கத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில், அய்யப்பன் நாயரை ஒரு அட்டப்பாடித் தமிழ்ப் பழங்குடியாகக் காட்டுகிறார் இயக்குநர். (நாயர் என்று பின்னொட்டு வந்த காரணத்தைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்) இப்படம் அதிகார மட்டத்தில் இருக்கும் இரு மனிதர்களின் வெகு சாதாரண ஈகோ யுத்தத்தையும் அதை அவர்கள் உணர்ந்து தன்முனைப்பைக் கடந்து செல்லும் தருணத்தை ஒரு சுவாரசியமான வணிக சினிமாவுக்குரிய தன்மையுடன் தந்திருந்தார் இயக்குநர். என்றபோதும் படத்தில் அட்டப்பாடிப் பழங்குடிகள் இன்றைக்கும் விட்டுவிடாத பண்பாட்டுக் கூறுகள், பழக்க, வழக்கங்களை வணிகப் படம் ஒன்றியில் அவர் தூவியிருந்த விதம் கலாபூர்வமானது. அய்யப்பனின் கதாபாத்திர வடிவமைப்புக்குப் பெரிதும் துணை நின்றது. அதேபோல கோஷி கதாபாத்திரம் கேரளத்தின் செல்வாக்கு மிக்க குரியன் கிறிஸ்தவ சமுதாயத்தின் செருக்கு மிகுந்த துணுக்குப் பிரதியாக எழுந்து நின்றது.

இந்த இரண்டு கதாபாத்திரங்களும் முதன் முதலில் சந்தித்து உரசிக்கொள்ளும் அட்டப்பாடி எல்லையில் கோஷி தன் வாகனத்தில் ஊட்டி நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பின்னணியில் ஒலிக்கும் “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு..” பாடல் என்ன சொல்ல வருகிறது... எதற்காக அந்தப் பாடல் என்பதைப் படம் பார்க்கும்போது உங்களால் உணர முடியும். அதுமட்டுமல்ல; அட்டப்பாடியில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பழங்குடிப் பெண்ணால் இட்டுக்கட்டி எழுதிப் பாடப்பட்ட அப்பாடல் ஒரு மலையாளப் பாடல்போல் தோன்றினாலும் உங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு அதை உற்றுக் கவனித்தால் அதுவொரு தமிழ் நாட்டார் பாடல் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

அப்பாடலின் இசையும், வரிகளும், மிக மிக முக்கியமாக அந்தப் பாடலை இட்டுக்கட்டி இத்தனைகாலம் பாடி வந்த அட்டப்பாடி நஞ்சியம்மாவின் குரல் கேட்கும் அனைவரையும் சொடுக்கி இழுத்துக்கொள்ளும் கொம்புத்தேன் போன்றது. அதில் ஒரு பழங்குடித் தமிழ்ப் பெண்ணின் மலையகத் தனிமையும் அதனூடாக அன்றாடப் பணிகளின் அழுத்தங்களைச் சுமையாகக் கருதாத அர்ப்பணிப்பு கொண்ட மென் மனதும் இழையோடுவதை உணர முடியும். .

‘களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு’ என்று முதல் வரியில் முதல் வார்த்தை தவிர மற்ற மூன்று வார்த்தைகளும் மாறாத தமிழாக இருப்பதைப் பாருங்கள். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நஞ்சியம்மா சொல்லியிருக்கிறார். “எப்போதாவது சந்தனமரக் காட்டின் மேலே வானத்தில் பறந்து மறையும் விமானத்தைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்ட நான் இட்டுக்கட்டிப் பாடிய பாடல். இதிலிருக்கும் மெட்டு எனது முன்னோர்களுடையது” என்றார்.

கேட்கக் கேட்க அந்தப் பாடலின் தமிழ் வரிகள் அப்படியே புலப்படுவதைப் பாருங்கள்..

கிழக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்திருக்கு
பூப்பறிக்க போகலாமோ, விமானத்த பார்க்கலாமோ..
லாலேலே லாலா லே லாலே லே லா லே
லாலேலே லாலா லே லாலே லே லா லே

தெக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்திருக்கு
பூப் பறிக்க போகலாமோ விமானத்தப் பார்க்கலாமோ
லாலேலே லாலா லே லாலே லே லா லே
லாலேலே லாலா லே லாலே லே லா லே

வடக்காத்த புங்க மரம் வெகுவாகப் பூத்திருக்கு
பூப் பறிக்கப் போகலாமோ விமானத்த பார்க்கலாமோ
லாலேலே லாலா லே லாலே லே லா லே
லாலேலே லாலா லே லாலே லே லா லே

மேற்காத்த நாவல் மரம் வெகுவாகப்பூத்திருக்கு
பூப் பறிக்கப் போகலாமோ.. விமானத்த பார்க்கலாமோ..
லாலேலே லாலா லே லாலே லே லா லே
லாலேலே லாலா லே லாலே லே லா லே

ஒரு தமிழ்ப் பாடல் - மலையாளப் பாடலாகவும் மாறி நிற்கும் அதிசயத்தை வீடியோவிலும் கண்டு களியுங்கள். விரைவில் இந்தப் பாடலை நஞ்சம்மா கொண்டு தமிழிலும் பாட வைப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்