கரோனா என்ற சிறுவனின் சோகக் கடிதம்: பரிசு அனுப்பிய டாம் ஹாங்ஸ்

By செய்திப்பிரிவு

கரோனா என்ற சிறுவன் தனக்கு எழுதிய கடிதத்துக்குப் பதில் எழுதியுள்ள நடிகர் டாம் ஹாங்ஸ், அவனுக்குப் பரிசாக, தனது கரோனா பிராண்ட் தட்டச்சு இயந்திரத்தை அனுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கரோனா டி வ்ரைஸ் என்ற பெயருள்ள 8 வயதுச் சிறுவன், தனது பெயரை வைத்து தன்னைப் பள்ளியில் கிண்டல் செய்கிறார்கள் என்று கூறி டாம் ஹாங்க்ஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.

முன்னதாக டாம் ஹாங்க்ஸும் அவரது மனைவி ரீடாவும், கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றது ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில். அங்கு 3 வாரங்கள் கழித்த பிறகு மீண்டும் இருவரும் அமெரிக்கா திரும்பியுள்ளனர். டாம் ஹாங்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்ததாலும், டாய் ஸ்டோரி படத்தில் குரல் கொடுத்திருந்ததாலும்தான் சிறுவன் அவருக்குக் கடிதம் எழுதியதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கரோனா தொற்று இருந்தது என்று செய்திகளில் அறிந்து கொண்டேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா. எனக்கு என் பெயர் பிடிக்கும். ஆனால் பள்ளியில் என்னை எல்லோரும் கரோனா வைரஸ் என்று அழைத்துக் கிண்டல் செய்கிறார்கள். என்னை அப்படி அழைக்கும்போது நிறைய வருத்தமும், கோபமும் வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தான் சிறுவன் கரோனா.

இதற்குப் பதிலளித்துள்ள டாம் ஹாங்ஸ், "அன்பு நண்பன் கரோனாவுக்கு, உனது கடிதம், என்னையும், என் மனைவியையும் சந்தோஷமாக உணர வைத்தது. ஒரு நல்ல நண்பனாக இருப்பதற்கு நன்றி. நண்பர்கள், சக நண்பர்கள் வருத்தமாக இருக்கும்போது அவர்களை நன்றாக உணரச் செய்வார்கள். எனக்குத் தெரிந்து கரோனா என்ற பெயரிருக்கும் ஒரே நபர் நீ தான். சூரியனைச் சுற்றியிருக்கும் வளையத்தைப் போல.

இந்தத் தட்டச்சு இயந்திரம் உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இதை நான் கோல்ட் கோஸ்டுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். அது மீண்டும் அங்கேயே உன்னிடம் வந்துவிட்டது. இதை எப்படி இயக்குவது என்று பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள். இதைப் பயன்படுத்தி எனக்குப் பதில் அனுப்பு" என்று கூறியுள்ளார்.

மேலும், டாய்ஸ்டோரி படத்தில் தனது பிரபலமான வசனமான என்னில் உனக்கொரு நண்பன் இருக்கிறான் என்ற வரிகளையும் சேர்த்து எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் மூலம் இது பரபரப்பான செய்தியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE