சினிமாவின் ஒவ்வொரு அம்சத்தையும் கற்றுக் கொடுத்தவர் மணிரத்னம்: மாதவன் நெகிழ்ச்சி

சினிமாவின் ஒவ்வொரு அம்சத்தையும் கற்றுக் கொடுத்தவர் மணிரத்னம் என்று மாதவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், பிரபலங்கள் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள்.

இந்த ஊரடங்கில் முதன்முறையாக, மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் இயக்குநர் மணிரத்னம். சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த நேரலை நிகழ்ந்தது.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ரியாஸ்கான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகமாக வெளியாகவுள்ளது. கரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு இல்லை மற்றும் ஓய்வில் இருக்கும் சமயங்களில் மணிரத்னம் கோல்ப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பவர். இந்த கோல்ப் விளையாட்டை மணிரத்னத்துக்கு கற்றுக் கொடுத்தது மாதவன் தான். இதனை சமீபத்திய ரசிகர்களுடைய நேரலையில் மணிரத்னம் பேசிக் கொண்டிருந்த போது சுஹாசினி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் நேரலையில் மாதவன் சில கேள்விகளை எழுப்பிய போது, சுஹாசினி, "அவர் வாழ்க்கையை ஏன் மாற்றினீர்கள்? அவர் படங்கள் எடுத்துக் கொண்டு நன்றாகத்தானே இருந்தார். எதற்காக அவருக்கு கோல்ப் விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தீர்கள்? என்ன செய்தார் மணி அப்படி?" என்று கேட்டார். மாதவன் பதிலளிப்பதற்குள் மணிரத்னம், "நான் அவருக்குச் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் பழிவாங்கிவிட்டார் என நினைக்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

சுஹாசினியின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக மாதவன், "'ஆயுத எழுத்து' படப்பிடிப்பின் போது, ''என்னடா கிழவன் விளையாடற கேம் எல்லாம் ஆடிட்டு இருக்க'' என்று கிண்டல் செய்து கொண்டே இருந்தார். அதில் நான் சற்று கடுப்பானேன். உங்களால் முடிந்தால் ஆடிக் காட்டுங்கள் என்று சொன்னேன். அவர் வந்து என்னைத் தோற்கடிக்கும் அளவுக்கு ஆடிவிட்டார்.

இன்னொரு விஷயம். அவர் தான் என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியமைத்தவர். அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். 'அலைபாயுதே'வில் என்னை ஒரு நடிகனாக மட்டும் விட்டுவிடவில்லை. சினிமாவின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வைத்தார்.

உதவி இயக்குநர், துணை இயக்குநர் போல இருக்க வைத்தார். கூட்டங்களைக் கட்டுப்படுத்த கற்றுக்கொடுத்தார். அதெல்லாமே எனக்கு புதிது. நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று அப்போது யோசித்திருக்கிறேன். ஆனால் ஒரு நடிகருக்கு சினிமாவின் ஒவ்வொரு துறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள அதை விடச் சிறந்த பயிற்சி இருக்க முடியாது. அதை நீங்கள் அறிமுகம் செய்த எல்லா நடிகர்களுக்கும் செய்தீர்களா சார்?" என்று கேள்வியுடன் மாதவன் முடித்தார்.

அதற்கு மணிரத்னம் "இல்லை, அது உனக்காக விசேஷமான பயிற்சி மேடி" என்று கூற, நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி விடைபெற்றார் மாதவன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE