ரம்ஜான் மாதம் முழுவதும் 25,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் சோனு சூட்

By செய்திப்பிரிவு

25,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கவுள்ளதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் எனப் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் 25,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக தனது தந்தை சக்தி சாகர் சூட் பெயரில் ‘சக்தி ஆனந்தம்’ என்ற ஒரு அறக்கட்டளை ஒன்றை அவர் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சோனு சூட் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

''தற்போது சூழல் மிகவும் கடினமானதாக உள்ளது. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவேண்டியது இந்தச் சூழலில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த அறக்கட்டளையின் மூலம் நோன்பு இருப்பவர்களுக்காக தினமும் உணவு வழங்க இருக்கிறேன். இதனால் நாள் முழுக்க நோன்பு இருந்தபிறகு அவர்கள் பசியோடு இருக்கவேண்டிய அவசியம் இருக்காது. இந்த உதவிகள் மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்''.

இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்குவதற்காக சோனு சூட், தன் ஹோட்டலை இலவசமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE