‘வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’ - ஊரடங்கு குறித்து வடிவேலு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணி்க்கை 21ஆயிரத்து 393 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணக்கை 681ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை நாடுமுழுவதும் 4,257 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர், 16 ஆயிரத்து 454 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 54 பேருக்கு புதியதாக நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந் துள்ளது.

கரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவில் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கரோனா வைரஸ் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வடிவேலு பேசியுள்ளதாவது:

தற்போது நடந்துகொண்டிருப்பது ஒரு போர். உலக நாடுகள் அனைத்தும் அணுகுண்டுகள், ஆயுதங்களையெல்லாம் கைவிட்டுவிட வேண்டும். மருத்துவ உலகம் தலைதூக்கி நிற்கவேண்டும். தற்போது மருத்துவ உலகமே திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் சொல்வதை கேட்டால் போதுமானது. அவர்கள் தான் நமக்கு கடவுள் போன்றவர்கள்.

வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அது கோடு, இது வீடு. ரோட்டை தாண்டியும் வரக்கூடாது என்று அரசு சொல்லிவிட்டது. ’

இந்த காலகட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்கும் பாடம்தான் காலம் முழுவதும் அவர்கள் மனதில் நிலைத்திருக்கும். இதுதான் அதற்கான சரியான சந்தர்ப்பம். யாருக்கும் கை கொடுக்கக்கூடாது, முத்தம் கொடுக்க வந்தால் அனுமதிக்கக் கூடாது போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்கள் பிற்காலத்தில் எவ்வளவு பெரிய அதிகாரிகளாக ஆனாலும் அவர்களுக்கு இப்போது சொல்லிக்கொடுக்கும் விஷயம் மனதில் இருக்கும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கடவுள் வழங்கியுள்ளார். அதை பயன்படுத்தி அவர்களை நல்லபடியாக வளர்த்து விட வேண்டும்.

இவ்வாறு வடிவேலு பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE