எதிர்மறையான கருத்துக்களும் தாக்கம் தரும்: மணிரத்னம்

By செய்திப்பிரிவு

எதிர்மறையான கருத்துக்களும் தாக்கம் தரும் என்று நேரலையில் பேசும் போது மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், பிரபலங்கள் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள்.

இந்த ஊரடங்கில் முதன்முறையாக, மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் இயக்குநர் மணிரத்னம். சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த நேரலை நிகழ்ந்தது.

இதில் எந்தவொரு கேள்வியையும் விடாமல் அனைத்துக் கேள்விகளுக்கும் மணிரத்னம் பதிலளித்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நேரலையில் ரசிகர் ஒருவர் "உங்கள் மனைவியைத் தாண்டி, உங்கள் படம் பற்றிய யாருடைய கருத்து உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும்?" என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக மணிரத்னம் கூறியதாவது:

"உங்கள் கருத்துதான். எல்லோருடைய கருத்துக்களும் தான். நல்ல கருத்துகள் எல்லாமே ஊக்கம் தரும். நாங்கள் அமைதியாகத் தெரிந்தாலும் நல்ல கருத்துகள் ஒரு தாக்கத்தைத் தரும். அதே போல எதிர்மறையான கருத்துக்களும் தாக்கம் தரும். இரண்டையுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் படம் ஒருவருக்குப் பிடிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது நல்ல உணர்வு தானே. அதே போல ஒருவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றும் தெரிந்துகொள்வதும் நல்லதுதான். அப்போது எங்கே தவறு நடந்திருக்கிறது என்பது புரியும்"

இவ்வாறு மணிரத்னம் பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE