'தி பேட்மேன்' வெளியீடும் தள்ளிப்போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

By ஏஎன்ஐ

கரோனா தொற்றால் உருவாகியிருக்கும் நெருக்கடி காரணமாக 'தி பேட்மேன்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நெருக்கடியால் ஹாலிவுட் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என பல்வேறு படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பெரிய படங்கள் அடுத்த வருடம் வெளியாகும் என்று தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன. இதனால் அடுத்த வருடம் வெளியாகவுள்ள படங்களின் தேதிகளும் மாறி வருகின்றன.

அப்படி அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாகவிருந்த 'தி பேட்மேன்' திரைப்படம், அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ராபர்ட் பேட்டின்ஸன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ரீபூட் என்று சொல்லப்பட்டும் மறு தொடக்கமாக இந்தப் படம் இருந்தாலும் இது பேட்மேன் எப்படி உருவானார் என்ற கதையைச் சொல்லாது என்று இயக்குநர் மேட் ரீவ்ஸ் சமீபத்தில் உறுதி செய்திருந்தார்.

மேலும், வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பில் 'தி மெனி செயின்ட்ஸ் ஆஃப் நியூஆர்க்' இந்த வருடம் செப்டம்பர் வெளியீட்டிலிருந்து அடுத்த வருடம் மார்ச் வெளியீடாக மாறியுள்ளது. வில் ஸ்மித் நடிப்பில் உருவாகும் 'கிங் ரிச்சர்ட்' திரைப்படம் இந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் அடுத்த வருடம் நவம்பர் மாதம்தான் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE