அற்புதமானது; உன்னதமானது: விஜயகாந்த் அறிவிப்புக்கு பவன் கல்யாண் பாராட்டு

கல்லூரி நிலத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பதாக அறிவித்திருக்கும் விஜயாகாந்துக்கு பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவர் சைமனின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் என பலரும் வேதனை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது வேதனையைப் பதிவிட்டு, கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் ஒரு பகுதியைத் தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து, பாராட்டி வருகிறார்கள்.

விஜயகாந்தின் இந்த அறிவிப்புக்கு தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கரோனாவால் பாதிக்கப்படு உயிரிழந்தவர்களை, அவரவர் சமூகத்துக்கான மயானத்திலேயே அடக்கம் செய்வது மறுக்கப்பட்டால், அவர்களை தங்கள் கல்லூரியின் நிலத்தில் அடக்கம் செய்யலாம் என்று கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செயல் அற்புதமானது, உன்னதமானது".

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE