பவன் கல்யாண் உடனான படம் இயலாத ஒன்று: காரணம் என்ன?- ராஜமெளலி வெளிப்படை

By செய்திப்பிரிவு

பவன் கல்யாண் உடனான படம் இப்போதைக்கு இயலாத ஒன்று என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் ராஜமெளலியின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு, ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார்.

இதுவும் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி தெரிவித்துள்ளார். இந்த கரோனா ஊரடங்கில் தந்தை விஜயேந்திர பிரசாத்துடன் அமர்ந்து, மகேஷ் பாபு படத்துக்கான கதை விவாதம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கரோனா ஊரடங்கில் பல்வேறு தொலைக்காட்சிகள், இணையதளங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் ராஜமெளலி. அதில் பவன் கல்யாணை எப்போது இயக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு ராஜமெளலி கூறியிருப்பதாவது:

"பவன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறார். ஆனால், இப்போது அவருடைய பார்வை முற்றிலும் வேறானது. சமூக சேவைகளில் அதிக கவனம் செலுத்துவதால் திரைப்படங்களுக்கு அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை. அதே நேரத்தில், ஒரு படத்தை முடிக்க எனக்கு அதிக காலம் எடுக்கிறது. இந்தச் சூழலில், பவன் கல்யாணோடு ஒரு படம் என்பது இப்போதைக்கு இயலாத ஒன்று".

இவ்வாறு இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE