ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது? - ஸ்ரீப்ரியா கேள்வி

ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது என்று நடிகை ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவர் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனை தெரிவித்தனர்.

மேலும், இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சைமனின் நண்பர் அளித்த பேட்டியும் இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கரோனா மனித இனத்தையே மரண பயத்தில் ஒதுக்கி வைத்திருக்கும் தொற்று. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் மனிதன் மாறுவான், மனிதத்தன்மை மேலோங்கும் என்று நினைப்போமேயானால் அது தவறோ என்று எண்ணும்படி எத்தனை சம்பவங்கள்?

கள்ளச்சாராயம், ஊழல், மதத்தின் அடிப்படையில் மக்களை மதிப்பது. அத்தனையும் அமோகமாக நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள். இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் இந்தக் காணொலி, என் மனதை உலுக்கிவிட்டது. கை தட்டினால் மட்டும் போதுமா? நமக்காகச் சேவை செய்து மாண்ட ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது?"

இவ்வாறு நடிகை ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE