கடந்த 10-15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த நல்ல காதல் படம்: ஜோதிகா பாராட்டும் இயக்குநரின் பதிலும்

By செய்திப்பிரிவு

'சில்லுக் கருப்பட்டி' படத்தைப் பாராட்டிப் பேசும்போது, தமிழ் சினிமாவில் நல்ல காதல் படங்களே வருவதில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி, சக்திவேலன் வழியே வெளியிட்டது.

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் பாராட்டினார்கள். மேலும், பல்வேறு விருதுகள் வழங்கும் விழாவிலும் இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கு விருது கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றை, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதிலும் இயக்குநர் ஹலிதா ஷமீம் விருது வென்றார். இந்த விழாவில் ஜோதிகா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஜோதிகா பேசும்போது, "தமிழ் சினிமாவில் குறைவான பேருக்கே காதலை மையப்படுத்திக் கதை எழுதும் புத்தி இருக்கிறது. கண்டிப்பாக இதைச் சொல்லியே ஆகணும். ஆகையால்தான் 'சில்லுக் கருப்பட்டி' படத்தைப் பாராட்டினேன். அந்தப் படத்தை 2டி நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்பது எனது முடிவுதான். அந்தப் படத்திலிருந்த காதல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

கடந்த 10-15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த ஒரு நல்ல காதல் படம் என்றால் அது 'சில்லுக் கருப்பட்டி'தான். இதை தைரியமாகச் சொல்வேன். மற்ற படங்கள் அனைத்திலுமே காமம்தான் இருந்தது. பெண்களின் பார்வையில் அது காதல் அல்ல, காமம்தான். என்னையும் சூர்யாவையும் பொறுத்தவரையில் காதல் படங்களை எழுத பெண் இயக்குநர்கள் முன்வர வேண்டும்” என்று பேசியுள்ளார்.

ஜோதிகாவின் இந்தப் பேச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹலிதா ஷமீம், "ஜோதிகா மேடம், இந்த மேடையில் என்ன சொன்னாரோ அதைத்தான் படம் பார்த்த பிறகும் என்னிடம் சொன்னார். அவர் இப்படிச் சொன்னார் என்று சொல்வதற்கே எனக்குக் கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால் அது அவ்வளவு பெரிய வார்த்தை. அது எனக்கு மட்டுமல்ல, நேர்த்தியாக கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கும் எல்லோருக்கும் ஊக்கமூட்டுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வெறும் நன்றி என்று சொல்லிக் கடந்து போக முடியாத ஒரு பந்தம். எங்கள் மொத்தக் குழுவிடமும் சூர்யா இவ்வளவு கனிவாக, எளிமையாக இருப்பார் என்று நினைக்கவில்லை. இந்தப் படம் குறைந்த நேரத்தில் பலரிடம் சென்று சேரக் காரணம் படம் மீது அவர்களுக்கு இருந்த அன்பு தான்" என்று தெரிவித்துள்ளார் ஹலிதா ஷமீம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE