நம் வேகத்தைக் குறைக்க வேண்டிய நேரம் இது: ஷாரூக் கான்

By செய்திப்பிரிவு

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜீரோ’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு 'லயன் கிங்' படத்தின் இந்தி டப்பிங்கில், தனது மகனுடன் இணைந்து குரல் கொடுத்ததைத் தாண்டி இன்று வரை ஷாரூக் கான் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

மேலும், கரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே தன் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகிறார். அக்‌ஷய் குமார் கரோனா நிவாரண நிதி அறிவித்தவுடனே, ஷாரூக் கான் எவ்வளவு கொடுக்கவுள்ளார் என்று ட்விட்டரில் தளத்தில் கேள்விகள் எழுந்து, அது ட்ரெண்டானது.

இதனிடையே, இன்று (ஏப்ரல் 20) ட்விட்டரில் நீண்ட நாட்கள் கழித்து #AskSRK என்ற ஹேஷ்டேகில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ஷாரூக் கான். நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுடன் உரையாடுவதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.

இதில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு ஷாரூக் கான் பதிலளித்திருந்தார். ரசிகர் ஒருவர், ‘இந்த நாட்களில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?’ என்று கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள ஷாரூக் கான், ''நாம் அனைவரும் நம் வேகத்தைக் குறைக்க வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிலும் 24/7 உடனடித் திருப்தியை எதிர்பார்ப்பதை விடுத்து வாழ்க்கையையும், இயற்கையையும் உணர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE