சைமன் இறுதிச் சடங்குக்கு இடையூறு; தமிழ்ச் சமூகத்துக்கே தலைக்குனிவு: கார்த்தி சாடல்

By செய்திப்பிரிவு

சைமனின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைக்குனிவு என்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (ஏப்ரல் 19) கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் காவல்துறை உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் போரில் முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதை தராமல் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாத செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"டாக்டர் சைமனின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE