திரைத்துறையில் 8 வருடங்கள் நிறைவு: ஆயுஷ்மன் குரானா நெகிழ்ச்சிப் பதிவு

தான் நடிக்க வந்த 8 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலிவுட் நடிகர் ஆயுஷ்மன் குரானா பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் இதுவரை மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும், தனக்கு பணிவைக் கற்றுக் கொடுக்கும்படியும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012-ஆம் ஆண்டு ஷூஜித் சிர்காரின் இயக்கத்தில் 'விக்கி டோனர்' படத்தில் ஆயுஷ்மன் குரானா நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது. தொடர்ந்து 'தம் லகா கே ஹாய்ஷா', 'ஷுப் மங்கள் சாவ்தான்', 'அந்தாதுன்', 'பதாய் ஹோ', 'ஆர்டிகள் 15' உள்ளிட்ட வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார் ஆயுஷ்மன்.

திங்கட்கிழமையோடு தான் திரைத்துறைக்கு வந்து 8 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி அவர் கூறியுள்ளதாவது:

"இந்த எட்டு வருடங்கள் மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும், பணிவைக் கற்றுக் கொடுக்கும்படியும் இருந்தது. வாய்ப்பு கிடைத்தாலும் இதில் நான் எதையும் மாற்ற மாட்டேன். எனது கனவுகளைத் துரத்த வாய்ப்பளித்த இந்த உலகத்துக்கு நான் நன்றி மட்டுமே கூற விரும்புகிறேன்.

பயணம் எளிதாக இல்லை. தன்னம்பிக்கை குறைந்து, அழுது என இதிலும் சில விஷயங்கள் இருந்தன. எந்தப் பின்னணியும் இல்லாத என்னை இருகரம் கொண்டு வரவேற்ற பாலிவுட்டுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன், தொலைநோக்கு பார்வை கொண்ட, என்ன அவர்களது கதைகளில் பங்கெடுக்க வைத்த அனைத்து இயக்குநர்களுக்கும் நான் கடன் பட்டிருக்கிறேன் ஏனென்றால் நான் இன்று இருக்கும் நிலைக்கு அவர்களே காரணம்.

எனது நடிப்பை விரும்பிய ரசிகர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் என் படங்களை நிறைய அன்போடு தொடர்ந்து அங்கீகரித்து வருகின்றனர். நான் எப்போது சரியான படத்தைத் தேர்வு செய்திருக்கிறேன், எப்போது செய்யவில்லை என்பதை அவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

எனது படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. எனவே நல்ல திரைத்துறையைத் தரும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதை உணர்கிறேன். மக்கள் என் படத்தைத் திரையரங்கில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையே அந்த எதிர்பார்ப்பு காட்டுகிறது. இன்றைய நாளில் அதுவே ஒரு நடிகருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு" என்று கூறியுள்ளார்.

இந்த நாளையொட்டி, திங்கட்கிழமை மாலை, தனது முதல் இயக்குநர் ஷூஜித் சிகாருடன் இன்ஸ்டாகிராமில் நேரடியாக உரையாடினார் ஆயுஷ்மன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE