'அர்ஜுன் ரெட்டி' இயக்குநரின் சவாலை ஏற்ற ராஜமெளலி: ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆருக்கு வேண்டுகோள்

'அர்ஜுன் ரெட்டி' இயக்குநரின் சவாலை ஏற்று வீடியோ வெளியிட்டுள்ளார் ராஜமெளலி. அதனைத் தொடர்ந்து ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு. இதனால் பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். பல திரையுலகப் பிரபலங்கள் வீட்டில் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி பலரும் ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் சவால் விடுத்து வருகிறார்கள். அதில் நேற்று (ஏப்ரல் 19) #BetheREALMAN என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. அதில் முதலாவதாக இயக்குநர் ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்து, "ஒரு ஆணால் சிறப்பாக வீட்டு வேலைகளைச் செய்ய முடியும். ஒரு உண்மையான ஆண் இதுபோன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை எப்போதும் தனியாக வேலை செய்யவிட மாட்டார்.

தயவுசெய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள். #BetheREALMAN. இதை ஊக்கப்படுத்தி ராஜமெளலி சாரை ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டேன் என்றும், நாளை வீடியோ வெளியிடுகிறேன் என்றும் ராஜமெளலி தெரிவித்திருந்தார். அதன்படி இயக்குநர் ராஜமெளலி தன் வீட்டு வேலைகளைப் பார்த்த வீடியோவை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் ராஜமெளலி கூறியிருப்பதாவது:

"சவாலை முடித்துவிட்டேன் சந்தீப். இந்த சவாலை ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணுக்குத் தருகிறேன். இன்னமும் மகிழ்ச்சியைக் கூட்டுவோம். நான் தயாரிப்பாளர் ஷோபு, இயக்குநர் சுகுமார் மற்றும் பெரியண்ணன் கீரவாணிக்கும் இந்த சவாலைத் தருகிறேன்".

இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE