128 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரண நிதி திரட்டிய லேடி காகா நிகழ்ச்சி

By ஐஏஎன்எஸ்

கோவிட்-19 நிவாரண நிதிக்காக பாப் பாடகி லேடி காகா நடத்திய 'ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம்' இசை நிகழ்ச்சி மூலம் 128 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரண்டுள்ளது.

இரண்டு மணிநேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்கள் ஷாரூக் கான் மற்றும் ப்ரியங்கா சோப்ரா, இசைக் கலைஞர்கள் ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னீ, எல்டன் ஜான், டெய்லர் ஸ்விஃப்ட், பியான்ஸே, அலிஸியா கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதலில் இது நிதி திரட்டலுக்கான நிகழ்ச்சியாக இல்லாமல், களத்தில் பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பல்வேறு மக்கள் நிதி அளித்துள்ளனர்.

இணையத்தில் தொடர்ந்து எட்டு மணிநேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. பிரபல பாடல்களை, புகழ்பெற்ற பாடகர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே பாடி ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இரண்டு மணிநேரத் தொலைக்காட்சி வடிவம் பிரிட்டனில், பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

க்ளோபல் சிட்டிசன் என்ற அமைப்புதான் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதன் மூலம் 127.9 மில்லியன் டாலர்கள் நிதி சேர்ந்துள்ளதை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

"இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச ஒளிபரப்பாக நடந்த இந்த நிகழ்ச்சியை உருவாக்க உதவி செய்த லேடி காகாவுக்கு நன்றி. வலிமையாக இருங்கள், பாதுகாப்புடன் இருங்கள், விரைவில் நாம் அனைவரும் நிஜத்தில் இணைவோம்" என்று க்ளோபல் சிட்டிசன் தரப்பு ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE