கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சி

கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு தமிழ்த் திரையுலகின் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறாத காரணத்தினால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

மே 3-ம் தேதி ஊரடங்குக்குப் பின் கூட, எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதனிடையே தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கினை மாலை 6 மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியிட்டு வந்தனர்.

இதில் ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால், பலரும் நிம்மதியடைந்தனர். இப்படி படிப்படியாக குறைந்து விரைவில் பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பினார்கள். ஆனால், நேற்று (ஏப்ரல் 19) 105 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் சென்னையில் மட்டும் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பதிவில், "இன்றைய சென்னை கரோனா தொற்றில் ஏற்றம் இருக்கிறது. நாம் சீக்கிரமாக (தடைகளை) தளர்த்துகிறோமா?" என்று கூறி இதில் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தொற்று அதிகரிப்பு தொடர்பாக சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் "தமிழகத்தில் இன்று மட்டும் 105 புதிய தொற்று நபர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கேட்பது பயத்தைத் தருகிறது. அதில் 50 பேர் சென்னையில். இவ்வளவு ஊரடங்கிலும் எங்கிருந்து இது பரவுகிறது? அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி, உங்களை, உங்கள் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி கோருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE