தொலைக்காட்சி நிறுவனங்கள் ஷூட்டிங் செல்லச் சொல்லவில்லை: ராதிகா

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சி நிறுவனங்கள் ஷூட்டிங் செல்லச் சொல்லவில்லை என்று ராதிகா விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள்தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின. தொலைக்காட்சி நிறுவனங்களும் சீரியல்களில் அடுத்தடுத்த எபிசோட்கள் இல்லாமல், பழைய நிகழ்ச்சிகள் மற்றும் ஹிட்டடித்த சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

இதனிடையே, மே 5-ம் தேதி படப்பிடிப்புக்குச் சென்று, மே 11-ம் தேதியிலிருந்து எபிசோட்கள் வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக குஷ்பு ஒரு நீண்ட ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குஷ்புவின் ஆடியோ பதிவைத் தொடர்ந்து, ராதிகாவும் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"காலையில் சுஜாதாவும் பேசினார். தொலைக்காட்சித் தரப்பிலும் பேசினேன். அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம். 2-3 சீரியல் தயாரிப்பாளர்களிடமும் பேசி அவர்கள் நிலை என்ன என்பது குறித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் குஷ்புவின் ஆடியோவைக் கேட்டேன்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் படப்பிடிப்புக்குச் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. படப்பிடிப்புக்குச் செல்வதற்குக் கதையை எல்லாம் தயார் செய்து, தயாராக இருங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதை அவர்களிடம் பேசி உறுதி செய்துகொண்டேன்.

படப்பிடிப்புக்குச் செல்லுங்கள் என்று சொன்னது அரசாங்கம்தான். சென்னையைப் பொறுத்தவரைக்கும் இன்னும் சிவப்பு மண்டலத்தில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கோடம்பாக்கம் ஹாட் ஸ்பாட்டில் இருக்கிறது.

ஹாட் ஸ்பாட் என்றால் ஆள் நடமாட்டமே பண்ண முடியாத ஒரு நிலைமையில் இருக்கிறோம். ஆகையால், படப்பிடிப்பு தொடர்பாக யோசிக்க முடியாது. இதெல்லாம் மாறியவுடன் எப்படிப் போகப்போகிறோம் என்பதற்கு குஷ்புவும் சில யோசனைகள் சொல்லியிருக்கிறார். அனைத்துத் தயாரிப்பாளர்களும் கலந்து பேசி எப்படியெல்லாம் செயல்பட முடியும் என்று பார்க்க வேண்டும். செல்வமணிக்கும் ஒரு ஆடியோ போட்டுச் சொல்லியிருக்கிறேன்.

ஒரு தருணத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்குத் தகுந்தாற் போல்தான் நாமும் வேலை செய்ய முடியும். அதை மனதில் வைத்துச் செயல்படுவோம். எப்படித் திட்டமிட்டுப் பணிபுரியலாம் என்பதைப் பார்க்க வேண்டும். முக்கியமாக ஷூட்டிங் செல்லுங்கள் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லவில்லை. அவர்கள் அதற்குத் தயாராக இருங்கள் என்றே சொன்னார்கள்".

இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE