'டாம் அண்ட் ஜெர்ரி', 'பாப்பாய்' இயக்குநர் மரணம்

By செய்திப்பிரிவு

'டாம் அண்ட் ஜெர்ரி' இயக்குநர் ஜீன் டைச் காலமானார். அவருக்கு வயது 95. கடந்த வியாழக்கிழமை இரவு, பராகுவேவில் இருக்கும் தனது அபார்ட்மென்ட் வீட்டில் டைச் காலமானார். செக் குடியரசில் இருக்கும் டைச்சின் பதிப்பாளர் பீட்டர் ஹிம்மெல், இந்த மரணம் எதிர்பாராதது என்று கூறியுள்ளார். டைச்சின் மரணத்துக்கு பல்வேறு ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிகாகோவில் பிறந்த ஜீன் டைச்சின் முழுப் பெயர் யூஜீன் மெரில் டைச். முன்ரோ, 'டாம் டெர்ரிஃபிக்', 'பாப்பாய்' உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியவர். வட அமெரிக்காவில் விமானத்துறையில் பணியாற்றிய டைச், ராணுவத்திலும் பின்னர் விமான ஓட்டுநர் பயிற்சியும் பெற்றார். பின்னர் 50’களில் 'ரெக்கார்ட் சேஞ்சர்' என்ற இசை பத்திரிகையின் வடிவமைப்பில் பங்காற்றினார். அமெரிக்காவின் முதல் தலைமுறை பாடகர்களில் ஒருவரான கானி கான்வெர்ஸின் ஆதரவாளராகவும், அவரது பாடல்களில் ஒலி அமைப்பையும் டைச் கவனித்துக்கொண்டார்.

1955-ல், யுனைடட் ப்ரொடக்‌ஷன்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற அனிமேஷன் ஸ்டுடியோவில் பணிக்குச் சேர்ந்தபின் தான் டைச்சின் அனிமேஷன் தொழில் வாழ்க்கை ஆரம்பமானது. 'சிட்னி தி எலிஃபண்ட்', 'க்ளிண்ட் க்ளாபர்' உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார். இவரது 'சிட்னீஸ் ஃபேமலி ட்ரீ' என்ற படைப்பு ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

1958-ல், ஜீன் டைச் அசோசியேட்ஸ் என்ற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் தொலைக்காட்சி விளம்பரங்களைத் தயாரித்து வந்தது. 1960-ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய 'முன்ரோ' என்ற கார்ட்டூன், சிறந்த அனிமேஷன் குறும்படம் என்ற ஆஸ்கரை வென்றது. இதன் பின் 'பாப்பாய்', 'டாம் அண்ட் ஜெர்ரி' உள்ளிட்ட கார்ட்டூன் படங்களையும் டைச் இயக்கினார். 1965-ல் 'ஹியர்ஸ் நட்னிக்' என்ற அனிமேஷன் குறும்படம் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டது, அதே ஆண்டு, அதே பிரிவில் டைச் இயக்கிய இன்னொரு அனிமேஷன் குறும்படமான 'ஹவ் டு அவாய்ட் ஃப்ரண்ட்ஷிப்'பும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டைச்சின் முதல் மனைவி மேரி 1960-ம் ஆண்டு காலமானார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஆல்டர்நேடிவ் காமிக்ஸ் நிறுவனத்தில் எழுத்தாளர், ஓவியர்கள் என பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்றனர். டைச்சின் இரண்டாவது மனைவி ஸ்டென்கா பராகுவே நகரில் டைச்சுடன் வாழ்ந்து வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE