ரத்த தானம் செய்த சிரஞ்சீவியின் அவசிய வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ரத்தத்துக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும், தானம் செய்யுங்கள் என்று சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ரேபிட் பரிசோதனைக் கருவிகள் மூலமாக, கரோனா தொற்றுப் பரிசோதனை ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருப்பதால், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தி திரையுலகப் பிரபலங்கள் பலரும் ரத்த தானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தானாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளார். மேலும், ரத்த தானம் தொடர்பாக வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"இந்த இக்கட்டான சூழலில், உயிர் காக்கும் ரத்தத்துக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவ அனைவரும் முன்வந்து ரத்த தானம் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அருகிலுள்ள ரத்த வங்கிக்குச் சென்றாலோ அல்லது அவர்களுக்கு போன் செய்தாலோ அவர்கள் உங்களுக்கு ரத்த தானம் செய்ய வழிகாட்டுவார்கள். இன்று என்னுடன் என் சகோ ஸ்ரீகாந்த், அவரது மகன் ரோஷன் ஆகியோரும் ரத்த தானம் செய்தனர். இதற்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைவோம்".

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE