#BetheREALMAN சவால்: ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுக்கும் 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர்

#BetheREALMAN சவால் என்ற ஒன்றைத் தொடங்கி இயக்குநர் ராஜமெளலிக்கு 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு. இதனால் பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். பல திரையுலகப் பிரபலங்கள் வீட்டில் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அவ்வப்போது கரோனா விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். சில திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய வீடுகளைச் சுத்தம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சந்தீப் ரெட்டி வாங்கா ட்விட்டர் பக்கத்தில் புதிய சவால் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதாவது தனது வீட்டின் வேலைகளைச் செய்து அதன் வீடியோவைப் பகிர வேண்டும். இந்தச் சவாலுக்கு #BetheREALMAN என்ற ஹேஷ்டேகை உருவாக்கியுள்ளார்.

இந்தச் சவால் தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் சந்தீப் ரெட்டி வாங்கா கூறியிருப்பதாவது:

"ஒரு ஆணால் சிறப்பாக வீட்டு வேலைகளைச் செய்ய முடியும். ஒரு உண்மையான ஆண் இதுபோன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை எப்போதும் தனியாக வேலை செய்யவிட மாட்டார். தயவுசெய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள். #BetheREALMAN. இதை ஊக்கப்படுத்தி ராஜமெளலி சாரை ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்".

இவ்வாறு சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார்.

இந்தச் சவாலை ஏற்று இயக்குநர் ராஜமெளலி வீடியோ வெளியிடுவாரா என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE