டீஸரா... ட்ரெய்லரா?- 'கே.ஜி.எஃப் 2' படக்குழு தகவல்

டீஸர் குறித்து யாஷ் ரசிகர்களின் கேள்விக்கு, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் பதில் அளித்துள்ளார்.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்' . இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. தமிழில் இந்தப் படத்தை விஷால் வெளியிட்டார். யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரஷாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தின் கதை இன்னும் முடியவில்லை. 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன், ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியைப் படமாக்க 'கே.ஜி.எஃப் 2' படக்குழு முடிவு செய்துள்ளது. அதோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. மேலும், 'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இந்த வெளியீட்டுத் தேதி சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும்.

இதனிடையே யாஷ் ரசிகர்கள் பலரும், 'கே.ஜி.எஃப் 2' டீஸர் தொடர்பாக கேள்விகள் எழுப்பிய வண்ணமிருந்தனர்.

இது தொடர்பாக படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான கார்த்திக் கவுடா தனது ட்விட்டர் பதிவில், " 'கே.ஜி.எஃப் 2' டீஸர் இப்போதைக்கு வெளிவராது. படவெளியீட்டு சமயத்தில் ஒரு ட்ரெய்லர் வெளியிடுவோம். அது ஒரு சிறப்பான ட்ரெய்லராக இருக்கும். எனவே இப்போது பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். முன்னோக்கிச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE