'காற்று வெளியிடை' லுக் டெஸ்ட்: அதிதி ராவ் பதற்றம்; அமைதிப்படுத்திய மணிரத்னம்; பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

'காற்று வெளியிடை' படத்தின் லுக் டெஸ்ட்டுக்காக மணிரத்னம் அலுவலகத்துக்குச் சென்ற சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் அதிதி ராவ்.

மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், பிரபலங்கள் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள்.

இந்த ஊரடங்கில், மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் இயக்குநர் மணிரத்னம். சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த நேரலை நடைபெற்றது.

இந்த நேரலையில் குஷ்பு, மாதவன், அதிதி ராவ் ஆகியோரும் கலந்துகொண்டு மணிரத்னத்திடம் கேள்விகள் எழுப்பினர். அதில் அதிதி ராவ் நேரலையில் வந்தார். சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் மணிரத்னம் உடனான புகைப்படம் குறித்து, "அவருக்கு நீ பூ தருவதைப் போல புகைப்படம் பகிரப்பட்டதே. என்ன அது? எப்போது நடந்தது?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அதிதி ராவ், "'காற்று வெளியிடை' படப்பிடிப்பு முடிந்த நாள் அது. எனக்கு அதற்கு மேல் தமிழ் சொல்லித் தர வேண்டாம் என்று மணி சார் நிம்மதியாக இருந்தார். அன்று அவருக்கு நான் பூ கொடுத்தேன்" என்று பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து, மணி சாரிடம் என்ன கேட்க வேண்டுமென்று சுஹாசினி கேட்க, நான் அவரைக் கட்டியணைத்து நன்றி தெரிவிக்க வேண்டுமென்றார். சமூக விலகலில் இருக்கிறோம், அதனால் கட்டிப்பிடிக்கக்கூடாது என சுஹாசினியும், மணிரத்னமும் உடனே பதிலளித்தார்கள். இங்கிருந்தே இணையத்தின் மூலம் கட்டிப்பிடிக்கிறேன் என்றார் அதிதி.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து "உங்கள் படங்களில் நடிகர்களைப் பார்க்கும்போது அவர்கள் அந்தக் கதாபாத்திரத்துக்காகவே பிறந்தவர்கள் போல இருக்கிறார்கள், எப்படி அது போன்ற நடிகர்களைக் கண்டுபிடிக்கிறீர்கள்?” என்று மணிரத்னத்திடம் அதிதி ராவ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மணிரத்னம், "எனக்குக் குறைந்தபட்ச தொந்தரவு தரும் ஒரு நடிகரை நான் தேடுவேன். (சிரித்துவிட்டு) நமக்கு சரியென்று தோன்றும் நடிகர்களைத் தேர்வு செய்வோம். எப்போதும் நாம் முதலில் நினைக்கும் நடிகர்களே நமக்குக் கிடைக்க மாட்டார்கள். ஆனால் வேறொருவர் கிடைப்பதும் நன்மையாக முடியலாம். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களை, மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்துக்காகத் தேர்வு செய்ய வேண்டாம் என நினைப்பேன். கதாபாத்திரம் முக்கியம், நடிகரின் ஆளுமை அல்ல.

ஆனால் நடிகர் தேர்வு என்பது 50 சதவீத வேலை மட்டுமே. சரியான நபரைத் தேர்வு செய்து, அவருக்கு உங்களிடம் ஒழுங்காக ஒத்துப் போனால், படப்பிடிப்பில் வேலை எளிதாக இருக்கும்" என்று பதிலளித்தார்.

"ஒரு வேளை நீங்கள் ஒருவரை மனதில் வைத்து எழுதிவிட்டு, வேறொருவர் நடிக்கச் சரியாக இருப்பார் என்று தோன்றினால் என்ன செய்வீர்கள்?" என்று மீண்டும் அதிதி ராவ் கேட்க, மணிரத்னம் "அதுவும் நல்லதுதானே. இன்னொரு வடிவம் நமக்குக் கிடைக்கும். நான் சொல்வதை அப்படியே செய்யும் ஒருவரை நான் தேடவில்லை. தனது சுயத்தையும் கொஞ்சம் நடிப்பில் கொண்டு வரும் நடிகரைத் தேடுகிறேன். எனவே காகிதத்தில் இருப்பது மட்டுமே இல்லாமல் கூடுதலாக ஒரு விஷயம் கிடைக்கும். அந்தக் கூடுதல் முயற்சி, திறனைத்தான் பார்க்கிறேன். ஒரு வேளை அவர் நான் சொன்னதிலிருந்து நேர்மாறாக ஒரு விஷயத்தைச் செய்யலாம். நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளாமல் வித்தியாசமாக ஒன்று செய்யலாம். ஆனால் அது எல்லாமே சாதகம்” என்று தெரிவித்தார்.

இறுதியாக, 'காற்று வெளியிடை' படத்துக்காக மணிரத்னம் அலுவலகத்துக்கு டெஸ்ட் ஷூட்டுக்குச் சென்றதை நினைவுகூர்ந்தார் அதிதி ராவ். அதில் "நான் உங்கள் அலுவலகத்துக்கு முதல் முறை வந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் மிக மிக அதிக பதற்றத்திலிருந்தேன். 'காற்று வெளியிடை' படத்தில் என் தாத்தா கதாபாத்திரத்திடம் பேசும் நீளமான தமிழ் வசனத்தைத் தந்தீர்கள்.

உங்கள் படத்தில் நடிப்பது எனது சிறுவயதுக் கனவு, ஆனால் அது பாழாகப்போகிறது, ஏனென்றால் எனக்கு தமிழ் வராது என்றேன். அதற்கு நீங்கள், நான் உன்னால் நடிக்க முடிகிறதா என்பதைப் பார்க்கவில்லை. நான் சொல்வதைப் புரிந்து அதை உன்னால் ஒழுங்காகக் கொண்டு வர முடிகிறதா என்றே பார்க்கிறேன். அது எனக்கு முற்றிலும் நடிப்பைப் பற்றிய புதிய பரிமாணத்தைத் தந்தது. அதைக் கேட்டதும் எனக்கு நிம்மதியாக இருந்தது" என்று கூறினார்.

உடனே மணிரத்னம், "அதெல்லாம் சரி. அது என்ன உன் சிறுவயதுக் கனவு என்று சொல்கிறாய்?" என்று கிண்டல் செய்தார். இதற்கு சுஹாசினி மணிரத்னம், "நீ அவரை வயதானவர் என்று சொன்னதால் இனிமேல் உன் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டார்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்