‘எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை’ - கங்கணாவின் குற்றச்சாட்டுக்கு ஃபாரா கான் அலி விளக்கம்

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில், மொரதாபாத்தில் நடந்த கல்லெறி சம்பவத்தைக் குறிப்பிட்டு மத வெறுப்பைத் தூண்டுவது போல கருத்து பகிர்ந்ததால், கங்கணாவின் சகோதரியும், அவரது செய்தித் தொடர்பாளருமான ரங்கோலி சாண்டெலின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

தனது சகோதரிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் கங்கணா. அதில் (ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி) சூஸன் கானின் சகோதரி ஃபாரா கான் அலி மற்றும் இயக்குநர் ரீமா காக்டி போன்றவர்களால் தேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சொன்னதாக தானும், தன் சகோதரியும் பொய்யாகக் குற்றம் சாட்டப்படுவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கங்கணாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் ஃபாரா கான் அலி.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

''அன்புள்ள கங்கணா.

நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. அதோடு நீங்கள் அற்புதமான நடிகை என்று கூறித் தொடங்குகிறேன். ரங்கோலியின் ட்வீட்டிற்கு என்னுடைய எதிர்வினைக்கு காரணம் மதசார்பற்ற ஊடகங்கள் மற்றும் முல்லாக்களோடு தொடர்புபடுத்தி ‘நாஜி’ என்ற வார்த்தையை அவர் தன்னுடைய ட்வீட்டில் பயன்படுத்தியதுதான்.

அந்த ட்வீட்டில் முல்லாக்களையும், மதச்சார்பற்ற ஊடகங்களையும் வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் ‘வரலாறு கிடக்கட்டும், அவர்கள் நம்மை நாஜி என்று சொல்வார்கள், போலி பிம்பத்தை விட வாழ்க்கைதான் முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

நாஜி என்பதற்கு யூதப் படுகொலை என்று அர்த்தம். 60 லட்சம் யூதர்கள் ஹிட்லராலும் நாஜிப்படையாலும் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டனர். அதுவே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது. எனவே நாஜி என்ற வார்த்தை முற்றிலுமாக தேவையற்றது. வெறுப்பைத் தூண்டுவது மட்டுமின்றி சட்டத்துக்கும் புறம்பானது. மற்றவர்களோடு சேர்ந்து நானும் அவரது ட்விட்டர் கணக்கு குறித்துப் புகார் செய்தேன்.

மொரதாபாத் மருத்துவரைக் கொன்றதாகச் சொல்லப்படுபவர் மீது அவர் கோபப்பட்டிருக்கலாம். ஒருவேளை அது உண்மையென்றால். கொலையாளி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த சூழலில் மருத்துவர்களோ, செவிலியர்களோ தாக்கப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ரங்கோலி மீதோ உங்கள் மீதோ எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. கடந்த காலங்களில் அவரைச் சந்தித்தும் இருக்கிறேன். அவர் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான பெண். தற்போது சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். எனவே தன்னுடைய ட்வீட்களில் அவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். நம்பியிழந்தவர்களுக்கு அவர் நம்பிக்கை ஊட்டுபவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு ஒரு உதாரணமாக அவர் இருக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதும், சிலரின் நடவடிக்கைகளுக்காக அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர் தன் தவறுகளை உணர்ந்து கொள்வார் என்றும், உங்கள் சகோதரியாக இருப்பதைக் காட்டிலும் அதிக சமூகப் பொறுப்பு அவருக்கு உள்ளதென்றும் நான் நம்புகிறேன்.

உங்கள் இருவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உங்கள் மீதும் நம் நாட்டின் மீது அமைதி உண்டாகட்டும்''.

இவ்வாறு ஃபாரா கான் அலி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE