வாசனை மற்றும் சுவையை இழந்தேன் - கரோனாவிலிருந்து மீண்ட ரீடா வில்சன் பகிர்வு

கடந்த மார்ச் மாதம் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டது.

டாம் ஹாங்க்ஸ் கரோனா வைரஸால் பாதிப்பட்டிருந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கும் அவரது மனைவி ரீடாவுக்கும் ஆறுதல் கூறி வந்தனர். பின்னர் கரோனா சிகிச்சை முடிந்ததும் டாம் ஹாங்க்ஸ் மற்றும் ரீடா இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் கரோனா வைரஸிலிருந்து மீண்டது குறித்து ரீடா வில்சன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் எங்களுக்கு அது இலகுவாக இருந்தது. ஏனெனில் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நமக்கு யாருமே இல்லையே அல்லது நம்மோடு இருப்பவரை பார்த்துக் கொள்ளவேண்டுமே என்ற மன அழுத்தம் எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.

ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையானதாக இருந்தது. எனக்கு கடும் காய்ச்சலும் தலைவலியும் ஏற்பட்டது. நான் என்னுடைய வாசனை மற்றும் சுவையை இழந்தேன். வயிற்றுப் பிரச்சினையும், கடும் நடுக்கமும் ஏற்பட்டது. நான் மிகவும் பயந்துவிட்டேன். என்னுடைய தசைகள் ஈரமான நூடுல்ஸ் போலாகிவிட்டன. என்னால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. நாங்கள் இவற்றையெல்லாம் கடக்க முயற்சி செய்தோம்.

ஆனால் டாம் ஹாங்க்ஸுக்கு இதுபோன்ற எந்த அறிகுறிகளும் இல்லை. காய்ச்சல் குறைவாகவே இருந்தது. வாசனையை அவர் இழக்கவில்லை. ஆனால் இருவருக்கும் குணமாக ஒரே கால அளவுதான் எடுத்தது.

இவ்வாறு ரீடா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE