பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானிக்கு கரோனா தொற்று இல்லை: வீடு திரும்பினார்

By ஐஏஎன்எஸ்

முன்னதாக கோவிட்-19 தொற்று இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானிக்கு, சமீபத்திய பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் சூப்பர்ஹிட் படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானி. இவரது மகள்கள், ஸோவா மற்று ஷாஸா இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்குத் தொற்று இருப்பது தெரியவந்த இரண்டு நாட்கள் கழித்து மொரானிக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

ஆனால் தற்போது மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் மொரானிக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது பற்றிப் பேசியுள்ள மொரானி, "கடவுளின் அன்பினாலும் கருணையாலும், நான் மீண்டும் வீடு திரும்பிவிட்டேன். ஏனென்றால் இரண்டு முறை பரிசோதித்துப் பார்த்து எனக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. நானாவதி மருத்துவமனையில் நான் சவுகரியமாக இருந்தேன். அங்கு இருந்தவரை எனக்கு அறிகுறிகளும் இல்லை.

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும், மருத்துவப் பணியாளர்களும் அற்புதமான பணியைச் செய்து வருகின்றனர் என்பதை நான் சொல்லியாக வேண்டும். நான் வீடு திரும்பினாலும், அறிவுறுத்தலின் பேரில் 14 நாட்கள் எனது அறையில் மட்டுமே தனிமையில் இருக்கப் போகிறேன். வீட்டுக்கு வந்ததில் பெரிய நிம்மதி. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். பாதுகாப்பாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE