இசையால் ஆறுதல் தர முடியும்: பாடகர் ஷங்கர் மகாதேவன்

By ஐஏஎன்எஸ்

கரோனா தொற்றால் தற்போது நிலவிவரும் பதட்டமான சூழலில் இசையால் ஒரு நேர்மறை எண்ணத்தையும், ஆறுதலையும் தர முடியும் என்று பாடகர் ஷங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, நிறைய இசைக் கலைஞர்கள் இணையத்தில் தங்கள் ரசிகர்களுக்காக நேரலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஏஷியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் #LiveFromHome என்ற முன்னெடுப்பின் ஒரு அங்கமாக, ஷங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

இதையொட்டி பேசியுள்ள ஷங்கர் மகாதேவன், "அனைவருக்கும் இது கடினமான காலம். இந்த தொற்றைப் பற்றி நிறைய இரைச்சல் இருக்கிறது. அது நமக்குள் பயத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.

ஆனால் நமது தேசத்தை சூழ்ந்திருக்கும் கரு மேகங்களுக்கு நடுவில் ஒரு வெளிச்சக் கீற்றைப் பார்க்க வைக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. அது ஒரு நேர்மறை எண்ணத்தை, ஆறுதல் உணர்வைக் கொண்டு வரும். ஒருவருக்காக நாம் பாடும் பாடல் அவரது மோசமான நாளை மாற்றலாம், இதிலிருந்து நம் அனைவருக்கும் ஒரு வகையான நம்பிக்கை கிடைக்கும்.

நானும், எனது மகன்கள் ஷிவம் மற்றும் சித்தார்த் இருவரும், ஏஷியன் பெயிண்ட்ஸின் #LiveFromHome முன்னெடுப்பில் பாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் நாம அனைவரும் ஒன்று சேர்ந்து, நன்றாக நேரத்தைச் செலவழித்து, இந்த சமூக விலகல் சமயத்திலும் (இசையால்) இணையலாம்" என்று கூறியுள்ளார்.

"இசையால் தூரத்தைப் போக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக ஊரடங்கு, சமூக விலகலால் நமது வாழ்க்கை குழப்பமான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில். #LiveFromHome முன்னெடுப்பு இந்த இடைவெளியை நிரப்ப, நேர்மறை சிந்தனையைப் பரப்ப வழி செய்யும்" என்று ஏஷியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE