பல கதாபாத்திரங்கள் மருத்துவர்களாக இருப்பது ஏன்? - மணிரத்னம் பதில்

By செய்திப்பிரிவு

தனது படங்களில் பல கதாபாத்திரங்கள் மருத்துவர்களாக இருப்பதற்கான காரணத்தை மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் ஊரடங்கால் வெள்ளிதிரை, சின்னதிரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. அனைத்து பிரபலங்களுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரசிகர்களோடு கலந்துரையாடி வருகிறார்கள்.

இந்த கரோனா ஊரடங்கில் முதன்முறையாக தனது மனைவி சுஹாசினியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் மூலம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் மணிரத்னம். எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல், அனைத்துக்குமே பதிலளித்துள்ளார்.

ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, மனைவி சுஹாசினி "இரண்டு உயரிய தொழில்கள் இருக்கிறதென்று சொல்லுவீர்கள். ஒன்று மருத்துவர், இன்னொன்று மக்களுக்குச் சேவை செய்வது. அதனால்தான் உங்கள் பல கதாபாத்திரங்கள் மருத்துவர்களாக இருக்கிறார்களா? மேலும் அந்த மருத்துவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்" என்று கேள்வி கேட்டார்.

அதற்கு மணிரத்னம், "அவர்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். வெவ்வேறு விதமான பிரச்சினைகளுடன் வரும் வெவ்வேறு விதமான மக்களை அவர்கள் கையாள்வதைப் பார்த்திருக்கிறேன். அது பிரமிப்பைத் தருகிறது. அவர்களை எப்போதும் அழைக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் துறையில் இருக்கும் புதிய விஷயத்தைத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

என்ன நடக்கிறது, எது சரி, எது தவறு என்று பார்த்து முடிவெடுக்க வேண்டும். மருத்துவராக பணிபுரியும் ஒவ்வொருவரைப் பார்த்தும் நான் அதிசயிக்கிறேன். அதுவும் இப்போதைய சூழலில், வெளியே, ஆபத்தான சூழலிலும் தன்னலமற்று பணியாற்றுகின்றனர். உண்மையிலேயே போர்வீரர்களாக இருக்கிறார்கள். அற்புதமான சேவை" என்று பதிலளித்துள்ளார் மணிரத்னம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE