மக்கள் மத்தியில் சினிமா தாக்கத்தை ஏற்படுத்துமா? - மணிரத்னம் பதில்

மக்கள் மத்தியில் சினிமா தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு இயக்குநர் மணிரத்னம் பதிலளித்துள்ளார்.

கரோனா வைரஸ் ஊரடங்கால் வெள்ளிதிரை, சின்னதிரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. அனைத்து பிரபலங்களுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரசிகர்களோடு கலந்துரையாடி வருகிறார்கள்.

இந்த கரோனா ஊரடங்கில் முதன்முறையாகத் தனது மனைவி சுஹாசினியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் மூலம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் மணிரத்னம். எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல், அனைத்துக்குமே பதிலளித்துள்ளார்.

இதில் ரசிகர் ஒருவர், "சினிமா எந்த அளவு மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்? இயக்குநர்களின் பொறுப்பு என்ன?" என்ற கேள்வியை மணிரத்னத்திடம் எழுப்பினார். அதற்கு மணிரத்னம் பதிலளிக்கும் போது கூறியதாவது:

"இயக்குநர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு சுமையைப் போடுவது போல. ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இசைக் கலைஞர் என அந்த பொறுப்பு எல்லோருக்கும் இருப்பது போலத்தான் இயக்குநருக்கும் உள்ளது.

மேலும் திரைப்படத்தின் தாக்கம் என்பது பற்றி பேச வேண்டுமென்றால், அவை திரைப்படங்கள் மட்டுமே . அவை ஏற்படுத்தும் தாக்கம் மட்டுமே உங்கள் குணத்தைத் தீர்மானிக்காது. நீங்கள் படிக்கும் புத்தகம், ரோட்டில் பார்ப்பது என அதற்கு நிறையக் காரணிகள் உள்ளன. திரைப்படம் அதில் ஒரு பகுதி மட்டும் தான்.

ஒரு இயக்குநராக, நான் அதில் ஒரு பங்கு இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதில் அதி முக்கியமானவன் அல்ல. எனவே ஒவ்வொரு படத்திலும் பாடம் எடுக்க வேண்டும் என்ற சுமையை நான் ஏற்றிக் கொள்ளக்கூடாது. எனவே எனது படங்களில் நான் பாடம் எடுக்கக் கூடாது என்று தான் பார்ப்பேன். நான் நினைப்பதை, என்னைப் பாதித்த விஷயங்களைத் தான் படத்தில் வைக்கிறேன்"

இவ்வாறு மணிரத்னம் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE