கதை திருட்டு சர்ச்சை: மீண்டும் சிக்கலில் ஹீரோ

கதை திருட்டு சர்ச்சையால், மீண்டும் 'ஹீரோ' படத்துக்குச் சிக்கல் உருவாகியுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியானது. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. உதவி இயக்குநர் போஸ்கோ என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்க, அதற்கு இயக்குநர் மித்ரன் தனது தரப்பிலிருந்து விளக்கத்தை மட்டுமே கொடுத்தார். நேரடியாக இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டார். மேலும், தொடர்ச்சியாக இது நீடித்ததால், இரண்டு கதையிலுமே நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது என்று எழுத்தாளர் சங்கம் கடிதம் அளித்தது.

இதனைத் தொடர்ந்து அந்த கடிதத்தை வைத்து நீதிமன்றத்தை நாடினார் உதவி இயக்குநர் போஸ்கோ. நீண்ட நாட்களாக நடைபெற்ற அந்த வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை. இதனிடையே படம் திரையரங்கில் வெளியான போதே, தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்துக்கும் விற்றுவிட்டது கே.ஜே.ஆர் நிறுவனம். அமேசானிலும் 'ஹீரோ' வெளியாகிவிட்டது.

வழக்கு இன்னும் முடிவு பெறாத நிலையில், 'ஹீரோ' டிஜிட்டல் வெளியீட்டு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று 'ஹீரோ' டிஜிட்டல் வெளியீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பின் நகலை அமேசான் நிறுவனத்துக்கு போஸ்கோ அனுப்பிவைத்துள்ளார். இந்த தீர்ப்பைப் படித்துவிட்டு அமேசான் நிறுவனமோ தங்களுடைய தளத்திலிருந்து 'ஹீரோ' படத்தை நீக்கிவிட்டது. கரோனா ஊரடங்கால் விரைவில் 'ஹீரோ' படத்தை ஒளிபரப்பி டி.ஆர்.பியை அதிகரிக்கத் திட்டமிட்டது சன் தொலைக்காட்சி. அதுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. தற்போது தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் இரண்டுக்கும் பெற்ற பணத்தைத் திரும்ப அளிக்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE