ட்விட்டரை முடக்கிவிட்டு இந்தியாவுக்கான சமூக வலைதளம் உருவாக்க வேண்டும்: கங்கணா ரணவத் அதிரடி

By செய்திப்பிரிவு

இந்திய அரசாங்கம், நமது நாட்டில் ட்விட்டரை மொத்தமாக முடக்கிவிட்டு, நமது நாட்டுக்கான ஒரு சமூக வலைதளத்தை ஆரம்பிக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில், மொரதாபாதில் நடந்த கல்லெறி சம்பவத்தைக் குறிப்பிட்டு மத வெறுப்பைத் தூண்டுவது போல கருத்து பகிர்ந்ததால், கங்கணாவின் சகோதரியும், அவரது செய்தித் தொடர்பாளருமான ரங்கோலி சாண்டெலின் கணக்கு முடக்கப்பட்டது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள கங்கணா, தனது சகோதரிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

அதில் (ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி) சூஸன் கானின் சகோதரி ஃபாரா கான் அலி மற்றும் இயக்குநர் ரீமா காக்டி போன்றவர்களால் தேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சொன்னதாக தானும், தன் சகோதரியும் பொய்யாகக் குற்றம்சாட்டப்படுவதாகக் கூறியுள்ளார்.

தனது சகோதரி, மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று சொன்னார் என்றும், தானும், தன் சகோதரியும், ஒவ்வொரு இஸ்லாமியரும் சுகாதாரத்துறை அதிகாரிகளையோ, காவல்துறையையோ தாக்குவதாகச் சொல்லவில்லை என்றும் கங்கணா கூறியுள்ளார்.

ட்விட்டர், இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாதி என்று அழைக்க அனுமதிக்கிறது. ஆனால் உண்மையான தீவிரவாதிகளை அப்படி அழைக்க விடாமல் தடுக்கிறது. அப்படிப்பட்ட ட்விட்டர் தளத்தை இந்தியாவில் முடக்கிவிட்டு, நமது நாட்டுக்கான சொந்தமான ஒரு சமூக வலைதளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கங்கணா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தியாவில் கரோனா தொற்று பரவியதற்கு தப்லிகி ஜமாத் அமைப்புதான் காரணம் என்று கூறிய மல்யுத்த வீராங்கனை பபிதா குமாரி ஃபோகட்டுக்கு எதிராக வரும் அச்சுறுதல்களிலிருந்து அவரைக் காக்க வேண்டும் என்று கங்கணா, பபிதாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE